இலங்கையின் அடுத்த அதிபர் யார்? நாடாளுமன்றத்தில் தொடங்கியது வாக்கெடுப்பு!

இலங்கையின் அடுத்த அதிபர் யார்? நாடாளுமன்றத்தில் தொடங்கியது வாக்கெடுப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட நிலையில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடினார். இதனைத் தொடர்ந்து இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கியுள்ளது.

புதிய இலங்கை அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. அதனைத் தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் எம்.பி.க்களுக்கு விளக்கமளித்தார். இந்த கூட்டம் முடிந்ததும் அனைத்து எம்.பி.க்களும் வாக்களிக்க வரும்படி எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. அதன்பிறகு புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

அதிபர் தேர்தல் ரேஸில் மூன்று பேர்!

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் இடைக்கால அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு, கோத்தபய ராஜபக்சவின் எஸ்எல்பிபி கட்சியின் ஆதரவு உள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிரான விக்ரமசிங்கேவின் கடுமையான நிலைப்பாடு காரணமாக பெரும்பாலான எஸ்எல்பிபி கட்சியின் உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், விக்ரமசிங்கே வெற்றி பெற்றால், அவர் ராஜபக்ச குடும்பத்தின் நலன்களைப் பாதுகாப்பார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த தேர்தலில் விக்ரமசிங்கேவின் கடும் போட்டியாளராக இருப்பவர் எஸ்எல்பிபி கட்சியின் அதிருப்தியாளராக உள்ள முன்னாள் கல்வி அமைச்சர் டளஸ் அலஹப்பெருமா ஆவார். இலங்கையின் பிரதான எதிர்கட்சியான எஸ்ஜேபியால் ஆதரிக்கப்படும் இவர் வெற்றி பெற்றால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே பிரேமதாச தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு அலஹப்பெருமாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார் என கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் மூன்றாவது வேட்பாளராக இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமர திஸாநாயகே போட்டியிடுகிறார். அவரது கூட்டணி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவர் இதற்கு முன்னர் நாட்டின் விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in