சீன ஆய்வகத்திலிருந்து கரோனா கசிந்தது குறித்த சந்தேகம்: நிலைப்பாட்டை மாற்றும் உலக சுகாதார நிறுவனம்


சீன ஆய்வகத்திலிருந்து கரோனா கசிந்தது குறித்த சந்தேகம்: நிலைப்பாட்டை மாற்றும் உலக சுகாதார நிறுவனம்

2019-ன் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், உலகமெங்கும் பரவி மனிதகுலத்தையே உலுக்கியெடுத்துவிட்டது. இதுவரை உலகம் முழுவதும் 63 லட்சம் பேர் கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்திருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த வைரஸ், சீனாவின் ஆய்வகத்திலிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவியது எனும் சதிக்கோட்பாடு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை ஆரம்பம் முதல் மறுத்துவந்த உலக சுகாதார நிறுவனம் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உள்ள வூஹான் நகரின் கடல் உணவுச் சந்தையிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியது என்றே இன்றுவரை நம்பப்படுகிறது. அந்தச் சந்தையில் மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவு வகைகளுடன், கோழி, பன்றி போன்றவற்றின் இறைச்சியும் விற்கப்பட்டுவந்தது. 2019 டிசம்பர் 31-ம் தேதி மக்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கக் காத்திருந்த சமயத்தில்தான், வூஹான் மருத்துவமனையில் புதிய வகை வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் பலர், வூஹான் கடல் உணவுச் சந்தையுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடையவர்களாக இருந்ததும் தெரியவந்தது. அதன் பிறகு, உலகமெங்கும் கரோனா வைரஸ் பரவியதையும், இன்று வரை அதிலிருந்து முழுமையாக விடுபட முடியாமல் உலகம் தவித்துக்கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். டெல்டா, ஒமைக்ரான் எனப் பல திரிபுகள் பரவிய நிலையில், தடுப்பூசிகள் மூலம் ஓரளவுக்கு இந்த பெருந்தொற்றைச் சமாளித்துவருகிறோம்.

கரோனா வைரஸ், வூஹானில் வைரஸ் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படும் ‘வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’ எனும் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து எதிர்கொண்டுவருகிறது. கரோனாவின் ரிஷி மூலத்தை ஆய்வுசெய்ய சீனாவுக்குச் சென்றிருந்த உலக சுகாதார நிறுவன ஆய்வாளர்களுக்குச் சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் விமர்சனங்கள் உண்டு.

இதற்கிடையே, அரிசோனா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வறிக்கை, கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து உருவானது அல்ல; வூஹான் கடல் உணவுச் சந்தையிலிருந்துதான் உருவானது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும், இவ்விஷயத்தில் சர்வதேச சமூகத்திடம் சீனா குறித்த சந்தேகம் நிலவுகிறது என்றும், பல்வேறு அமைப்புகள் இணைந்து இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; அதற்குச் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பலரும் கோரி வருகிறார்கள்.

ஆனால், சீனாவில் ஆய்வு நடத்த ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜப்பான், கென்யா, ரஷ்யா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய உலக சுகாதார நிறுவன நிபுணர் குழுவை இரண்டு முறை அழைத்ததாகவும், அவர்கள் சீனாவில் தாங்கள் விரும்பிய இடத்துக்கெல்லாம் சென்று, விரும்பிய நபர்களைச் சந்தித்து ஆய்வு நடத்தினர் என்றும் சீனா தொடர்ந்து வாதிடுகிறது. ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் கசிந்தது எனும் வாதம் ஏற்புடையது அல்ல என்றே உலக சுகாதார நிறுவனம் - சீனாவின் கூட்டறிக்கை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தில், சீனா மீதான சந்தேகத்தை உலக சுகாதார நிறுவனம் உடனடியாக மறுதலித்தது விமர்சனத்துக்குள்ளானது. வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பே இல்லை என்று கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் உறுதியாகத் தெரிவித்தது.

உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம்
உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம்

அதேசமயம், தன்னளவில் இதுகுறித்த உண்மைகளைத் தெரிந்துகொள்ள உலக சுகாதார நிறுவனம் முயற்சிக்கவே செய்கிறது. வூஹான் நகரில் ஆரம்பகட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்குமாறு 2022 பிப்ரவரி மாதம் கூட சீன அரசு அதிகாரிகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம் கடிதம் எழுதியிருந்தார். எனினும், இதற்கு சீனா பதிலளித்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில், நேற்று (ஜூன் 9) உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கோவிட் 19 பெருந்தொற்று தொடங்கியது எப்படி என்பதை விளக்கும் முக்கியத் தரவுகள் விடுபட்டிருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வைரஸின் தொடக்கம் குறித்த நியாயமான எல்லா கருதுகோள்களின் அடிப்படையிலும் ஆய்வு நடத்த வழிவகுக்கும் எல்லா அறிவியல் ஆதாரங்களையும் பரிசீலிக்கத் தயார் என்றும் அக்குழு தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்னர் ஆய்வகத்திலிருந்து எதிர்பாராதவிதமாக நேர்ந்த கசிவுகள் மூலம் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிபுணர்கள், வூஹான் ஆய்வகம் தொடர்பாக நிலவும் சந்தேகத்தைப் புறந்தள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

27 பேர் கொண்ட இந்தக் குழுவின் துணைத் தலைவர் ழான் கிளாடி மேனுகுவேரா, “ஆய்வகக் கசிவு தொடர்பான கருதுகோள் தொடர்பாக விசாரணை நடத்துவது என்பது சில விஞ்ஞானிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். ஆனால், இது குறித்து ஆய்வு நடத்த அவர்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் இதுவரை இவ்விஷயத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டை உலக சுகாதார நிறுவனம் மாற்றிக்கொண்டிருக்கிறது. கூடவே, இதுவரை எதிர்கொண்டிருந்த விமர்சனங்களுக்கும் அது எதிர்வினையாற்றியிருப்பதாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in