'போரின் ஆயுதமாக கோதுமையைப் பயன்படுத்தாதீர்கள்!’ - உக்ரைனை வலியுறுத்தும் போப்

'போரின் ஆயுதமாக கோதுமையைப் பயன்படுத்தாதீர்கள்!’ - உக்ரைனை வலியுறுத்தும் போப்

உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்குமாறு வலியுறுத்தியிருக்கும் போப் பிரான்சிஸ், கோதுமையை போரின் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் இன்று பேசிய போப் பிரான்சிஸ், “உலகின் ஏழ்மையான நாடுகளில் உள்ள பல மில்லியன் மக்கள் உக்ரைனில் இருந்து வரும் கோதுமையை நம்பியுள்ளனர், எனவே ஏற்றுமதிக்கான தடையை உக்ரைன் நீக்க வேண்டும்” எனக் கோரினார்.

மேலும், “உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதியைத் தடுப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், சத்துணவுக்கான உலகளாவிய உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் இதயபூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து அடிப்படை உணவுப் பொருளான கோதுமையை போரின் ஆயுதமாகப் பயன்படுத்தாதீர்கள்" என்று அவர் கூறினார்.

உலகளவில் உணவு நெருக்கடி மோசமடைந்து வருவதாகக் கவலைப்படும் ஐநா சபை, உக்ரைனின் கோதுமை ஏற்றுமதி தடையை நீக்க ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறது, ஆனால் ரஷ்யாதான் உக்ரைன் துறைமுகங்களை முற்றுகையிட்டு நெருக்கடியை உருவாக்குவதாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கையை பிப்ரவரி 24-ம் தேதி அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். அதன் பின்னர் உக்ரைன் நாட்டின் பல நகரங்களின் மீதும் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா. உக்ரைன் போர் மற்றும் ரஷ்யா மீதான உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், உரம் மற்றும் எரிபொருட்களின் விலை உலகளவில் அதிகரித்து நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை போப் பல முறை கண்டித்துள்ளார். ஆனால் அதன் விளைவாக உருவான உலகளாவிய உணவு நெருக்கடி அவர் பேசியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in