வன்முறைக் களமான இலங்கை: என்ன நடக்கும் இனி?

வன்முறைக் களமான இலங்கை: என்ன நடக்கும் இனி?

வன்முறைச் சம்பவங்கள் இலங்கைக்குப் புதிதல்ல. ஆனால், நேற்று வெடித்த வன்முறைச் சம்பவங்கள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. இலங்கையின் எதிர்காலத்தின் மீது இருண்ட நிழலாகப் படியவிருக்கும் அசம்பாவிதங்கள் அவை. இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி உருவாகக் காரணமாக இருந்த ஆட்சியாளர்கள் மீது மக்கள் மனதில் கனன்றுகொண்டிருந்த கோபம், அதிகாரவர்க்கத்தினரின் வீடுகளைப் பெருந்தீயாகப் பொசுக்கிக்கொண்டிருக்கிறது.

திங்கள்கிழமை மாலை 7 மணி முதல் புதன் காலை 7 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட உத்தரவிடுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனா கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், அதிபரையே பதவிலகச் சொல்லி மக்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைக் கூட்டி என்ன சாதித்துவிட முடியும் எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச பதவிவிலகிவிட்டாலும், அவரது தம்பியும் அதிபருமான கோத்தபய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுதான் பெரும்பாலான இலங்கை மக்கள் விரும்புகிறார்கள். பதவிவிலகுமாறு மூன்று நாட்களுக்கு முன்பே மகிந்தவை கோத்தபய கேட்டுக்கொண்டதாகவும், இவ்விஷயத்தில் சகோதரர்களுக்கு இடையிலேயே முரண்கள் நிலவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரணமாக மகிந்த பதவிவிலகிவிடவில்லை. காலிமுகத் திடலில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவர்களின் முகாம்களை அடித்து நொறுக்கியும் தீயிட்டுக் கொளுத்தியும் அவரது ஆதரவாளர்கள் நிகழ்த்திய வெறியாட்டமும், ஒருகட்டத்தில் கோபமடைந்து மக்கள் கொடுத்த பதிலடியும் பெரும் வன்முறைக்கு இட்டுச் சென்றன. அந்த வன்முறையின் தாக்கம் கொழும்புவிலும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமல்லாது இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலித்தது. அதன் பின்னர்தான் அவர் பதவி விலகினார்.

இந்த வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தினர். கொழும்பு தேசிய மருத்துவமனையில், போராட்டத்தில் காயமடைந்த காவலர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்க மறுத்து மருத்துவர்களும் செவிலியர்களும் எதிர்க்குரல் எழுப்பியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதிகாரவர்க்கத்தின் மீது அனைத்துத் தரப்பினரும் கோபமடைந்திருப்பதையே இது காட்டுகிறது. மகிந்தவின் பூர்விக வீடு முதல் அமைச்சர்கள் வரை பலரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொலிகள், சாலையில் மகிந்தவின் ஆதரவாளர் ஒருவர் நிர்வாணக் கோலத்தில் தாக்கப்படும் காணொலி போன்றவற்றுக்கு அத்தனை ஹார்ட்டின்கள் விடப்படுவதும், லைக்ஸ் குவிவதும் மக்களின் கடும்கோபத்தில் இருக்கும் அறச்சீற்றத்தின் வலிமையைத்தான் உணர்த்துகின்றன. தமிழர்களை அழித்தொழித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ராஜபக்ச குடும்பம், அவர்களை வழிபட்ட சிங்களவர்களின் சினத்துக்கு இன்று ஆளாகியிருப்பது தமிழகத்திலும் பலரது மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

1948-ல் சுதந்திரமடைந்தது முதல் இலங்கையின் பொருளாதாரம் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என்பது உண்மை. கூடவே, விடுதலைப் புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான நடவடிக்கைகள், ராணுவத்துக்காக அதிகம் செலவு செய்தது, 2009-ல் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர், தொலைநோக்கு இல்லாமல் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய கடன், 2019-ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட சுணக்கம் எனப் பல்வேறு பிரச்சினைகள் இலங்கையை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. கூடவே கரோனா காலத்தில் சுற்றுலாத் துறை முற்றிலுமாக முடங்கியது, சரியாகத் திட்டமிடாமல் இயற்கை விவசாயம் எனும் பெயரில் ரசாயன உரங்களுக்கு உடனடியாகத் தடைவிதித்தது, கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடு நெருங்கியது, கையிருப்பில் இருந்த அந்நியச் செலாவணி கரைந்ததால் எரிபொருள் முதல் உணவுப் பொருள் வரை இறக்குமதி செய்ய முடியாமல் திணறியது என இன்னும் பல பிரச்சினைகள் இலங்கையை இன்னலில் தள்ளின.

இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணியாக இருந்தது ராஜபக்ச சகோதரர்களின் ஆணவம்தான் என்பதால் மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினார்கள். ஏப்ரல் 9 முதல் வீதிகளில் இறங்கி மக்கள் போராடிவருகிறார்கள். மக்கள் போராட்டத்தில் இறங்கிய ஆரம்பகட்டத்திலேயே ‘வன்முறையால் எதற்கும் தீர்வுகாண முடியாது’ என்று ராஜபக்ச சகோதரர்கள் பேசியது கவனிக்கத்தக்கது. இன்றைக்கு அவர்களது ஆதரவாளர்கள்தான் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறார்கள்.

நேற்று நடந்த தாக்குதலில் 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனைத்துக் கட்சிகள் இணைந்த தற்காலிக அரசு அமைவதற்கு வழிவகுக்கும் வகையில் ராஜினாமா செய்வதாகக் கூறியிருந்த மகிந்த, மக்களுக்கு உதவ எதிர்காலத்தில்கூட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக உருக்கத்துடன் கூறியது இன்னொரு இருள் நகைச்சுவை.

பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸ் கட்டிடம் அமைந்திருக்கும் இடத்துக்கு எதிரேதான் காலிமுக மைதானம் உள்ளது. அங்குதான் கோத்தபய பதவிவிலகக் கோரி ஜனநாயக முறையில் மக்கள் போராடிவந்தனர்.மகிந்தவின் இல்லம் முன் கூடிய அவரது ஆதரவாளர்கள் நேராக அங்கு சென்று போராட்டக்காரர்களைத் தாக்கினர். போலீஸாரால் அவர்களைத் தடுக்க முடியவில்லை.

ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரணில் விக்கிரமசிங்கே கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நேரடியாகப் போராட்டக் களத்துக்கே சென்று பார்வையிட்டிருக்கிறார். அப்போது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து மகிந்தவைக் கைதுசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிவருகின்றன.

இதற்கிடையே வன்முறையைத் தூண்டிவிட்டது மகிந்தவின் ஆதரவாளர்கள்தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகிவிட்டது. மகிந்தவின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் குறித்து சிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அமைதியாகப் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த உடைமைகளையும் அவர்கள் சேதப்படுத்தியதாக காவல் துறை தெரிவித்திருக்கிறது. இலங்கை காவல் துறையின் ஐஜி, இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருப்பதுடன் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கோத்தபயவுடன் கைகோத்து இடைக்கால அரசை அமைக்க மறுத்துவிட்டது. அந்தக் கட்சியாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பதால் சிக்கல் நீடித்துக்கொண்டே போகிறது.

கோத்தபய பதவிவிலகுவதுதான் இலங்கை மக்கள் விரும்பும் கிளைமாக்ஸ். ஆனால், அதன் பின்னரும் தீர்வுகள் கிடைக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி. காரணம், இலங்கையில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் அந்நாட்டின் மீதான பார்வையைச் சர்வதேச அளவில் குலைத்திருக்கின்றன.

பிரதமர் பதவி விலகியது, வன்முறைச் சம்பவங்கள் உச்சமடைந்திருப்பது போன்றவற்றால் பன்னாட்டு நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தாமதமாகும் என சிட்டிக்ரூப் குளோபல் மார்க்கெட்ஸ் அமைப்பு தெரிவித்திருக்கிறது. வாட் வரியை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும் என்றாலும் பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவிதான் இலங்கை மீண்டுவர ஓரளவுக்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்தச் செய்தி கூடுதல் பதற்றத்தைத்தான் கொடுக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இலங்கைப் பிரச்சினைக்கு இப்போதைக்குத் தீர்வு கிட்ட வாய்ப்பில்லை!

Related Stories

No stories found.