எண்ணெய்க்குத் தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கும் ரஷ்யா: என்னவாகும் ஐரோப்பா?

எண்ணெய்க்குத் தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கும் ரஷ்யா: என்னவாகும் ஐரோப்பா?

உக்ரைன் மீதான போரை அடுத்து பொருளாதாரத் தடைகளை ஒவ்வொன்றாக அறிவிக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா புதிய எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை வாங்கக் கூடாதென்று தடை விதித்தால் ஒரு பீப்பாய் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை 300 டாலர்களுக்கு மேல் உயர்ந்துவிடும், ஐரோப்பியக் கண்டம் முழுவதும் உள்ள நாடுகளும் உலகின் பெரும்பாலான நாடுகளும் இதனால் கடுமையான விலைவாசி உயர்வால் வருந்த நேரும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவித்திருக்கிறது. ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாந்தர் நோவாக் ரஷ்யத் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை இரவு தோன்றி இந்த எச்சரிக்கையை விடுத்தார். அது மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்கெனவே வழங்கிக் கொண்டிருக்கும் எண்ணெய், எரிவாயு சப்ளையைக்கூட முழுதாக நிறுத்திவிடுவோம் என்றும் எச்சரிக்கையைக் கடுமையாக்கியிருக்கிறார். இது முழுக்க முழுக்க உண்மை என்பதால் ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் நாட்டுத் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் பைடன் மீண்டும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இரு பக்கமும் கூரான கத்தி

உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யாவை வழிக்குக் கொண்டுவர அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தால் போதும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தன. அந்தத் தடைகள் உடனடியாக ரஷ்யப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. அதே சமயம் அந்த நடவடிக்கைகள் இரு பக்கமும் கூரான கத்தி என்பது ஐரோப்பிய நாடுகளுக்கு இப்போதுதான் உறைக்கத் தொடங்கியிருக்கிறது. பொருளாதாரத் தடையைக்கூட முழுமையாக எடுக்காமல், அதிலும் ஒரு கள்ளத்தனத்தை அமெரிக்காவும் பிற நாடுகளும் செய்தன. ரஷ்யாவுடன் கச்சா பெட்ரோலிய எண்ணெய், நிலவாயுவுக்கான தங்களுடைய கணக்குகளைப் பெருமளவு வைத்திருக்கும் இரண்டு பெரிய ரஷ்ய வங்கிகள் மீது தடையை விதிக்கவில்லை.

அத்துடன் அவற்றின் மூலம் ஐரோப்பிய நாடுகள் பணம் செலுத்தி எண்ணெய், எரிவாயு வாங்கிக்கொள்ளவும் அனுமதித்தது. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஆலோசனை கூறும் வேறு சிலர், செலவுக்குப் பணம் எடுக்க முடியாமல் ரஷ்யா திண்டாட வேண்டும், அதற்கு ஒரு வழி யாரும் அந்த நாட்டிடமிருந்து எண்ணெய், எரிவாயு வாங்காமல் தடுப்பதுதான் என்று கூறினர். அதையடுத்து அந்த முடிவையும் அமெரிக்கா அறிவித்துவிட்டது.

இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை திங்கள்கிழமை முதல் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு கப்பல்களின் ஓட்டம் அதிகரித்தும்கூட கச்சா எண்ணெய் விலை உயரட்டும் என்று காத்திருந்த எண்ணெய் வள நாடுகள், உற்பத்தியைக் கூட்டாமலேயே காலம் தாழ்த்தின. ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கிக் கொள்ளப்படாததால் அந்த நாடும் முழுமையாக எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடாமல் இருக்கிறது. இதற்கிடையே அரசியல் காரணங்களுக்காக வெனிசூலா நாட்டிலிருந்தும் கச்சா பெட்ரோலிய எண்ணெய் வாங்க அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்தது.

அமெரிக்காவுக்கு இரட்டை லாபம்

இப்படி சந்தையின் போக்குக்கு மாறாக எண்ணெய் உற்பத்தியை அவ்வப்போது செயற்கையாகத் தடுத்ததால் இப்போது விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் இறக்குமதி கச்சா பெட்ரோலிய எண்ணையைக் கொண்டுதான் 80 சதவீதம் அளவுக்குத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. எனவே இந்த விலையுயர்வு இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாக சேதப்படுத்திவிடும்.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடம் வகிக்கும் அமெரிக்கா, அவற்றில் பெரும்பாலானவற்றைத் தன்னுடைய நுகர்வுக்கு செலவழிக்கிறது. எனவே பிற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியளவு குறித்து அது அதிகம் கவலைப்படத் தேவையில்லை. விலை உயர்வதால் அமெரிக்காவுக்கு இன்னொரு வகையில் லாபம். குறைந்த அளவு சொந்த நாட்டு சரக்கை விற்றால்கூட, பிற எண்ணெய் வள நாடுகளைவிட அதிக லாபத்தைக் குறைந்த காலத்தில் சம்பாதித்துவிடலாம். ஒரே பிரச்சினை ஐரோப்பிய நாடுகளின் தேவைகளுக்கேற்ற அளவு எண்ணெய்யை மிகக் குறுகிய காலத்தில் அமெரிக்காவால் கொண்டு சேர்க்க முடியாது. விலையுயர்வு அதற்கு மறைமுகமாக கொழுத்த லாபத்தையே தரும். அமெரிக்காவையே அண்டி வாழும் நாடுகள்தான் இதற்கு அதிக விலை தர வேண்டியிருக்கும்.

ஈரான் மூலமும் ஈடுகட்ட முடியாது

அணு ஆயுதப் பரவல் தடை விதிகளை ஏற்பது தொடர்பாகவும், ஈரானின் அணு ஆலைகளில் அணுகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் கையிருப்பில் உள்ள அளவு தொடர்பாகவும் சர்வதேச அணுசக்தி முகமை திருப்தி தெரிவித்தால்தான் அதன் மீதான தடை முழுதாக விலகும். அதற்குப் பிறகே ஈரானை முழு அளவுக்கு எண்ணெய் தயாரிக்க அனுமதி வழங்க முடியும். அப்படியே அது தயாரித்தால்கூட போர்ச் சூழலில் கப்பலில் வெகு விரைவாக நுகர்வு நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாது. இப்படி எண்ணெய் விலை உயர்வுக்கு ஆதரவாகவே பல காரணிகள் தொடர்கின்றன. இந்த நிலையில் ரஷ்யாவின் எச்சரிக்கை வெறும் மிரட்டல் அல்ல, உண்மையே என்று சந்தை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

ஜெர்மனிக்கு ஆபத்து

ரஷ்யாவிலிருந்து இயற்கை எரிவாயுவைக் கொண்டுவர நோர்ட்-2 எரிவாயுக் குழாய் பதிப்பு வேலை முடிந்துவிட்டது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதால் இந்தப் பாதை வழியாக எரிவாயுவை வாங்க மாட்டோம் என்று ஜெர்மனி அறிவித்தது. ரஷ்யா இந்தத் திட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபிள்களை முதலீடு செய்திருப்பதால் அது தயங்கும் என்று ஜெர்மனி எதிர்பார்த்தது. ஆனால் ரஷ்ய துணைப் பிரதமரோ, நோர்ட்-2 வேண்டாமென்றால் நோர்ட்-1 வழியாக அனுப்பும் இயற்கை எரிவாயுவையும் நிறுத்திவிடுவோம் என்று பதிலுக்கு எச்சரித்திருக்கிறார். ரஷ்யாவின் எரிவாயுவை மட்டுமே ஜெர்மனி பெருமளவுக்கு நம்பியிருக்கிறது. ஜெர்மனி மட்டுமல்ல ஐரோப்பா முழுவதுமே ரஷ்ய எரிவாயுவையே பெரிதும் நம்பியிருக்கின்றன. ஐரோப்பாவின் எரிவாயுத் தேவையில் 40 சதவீதம் ரஷ்யாவால் பூர்த்தி செய்யப்படுகிறது.

ரஷ்யா விடுக்கும் சவால்

ரஷ்யா அன்றாடம் 70 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. இது உலக அளவில் 7 சதவீதமாகும். எங்களுடைய எண்ணெய், இயற்கை எரிவாயு வேண்டாமென்றால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை, எங்களுடைய நட்பு நாடுகளுக்கு அவற்றை விற்றுக்கொள்வோம். ஐரோப்பா வேறு எந்த நாட்டிடமிருந்து எண்ணெய், எரிவாயு வாங்க விரும்பினாலும் அதற்கான நடைமுறைகள் குழாய்ப் பாதைகள் போன்றவற்றை அமைக்க மேலும் ஓராண்டு ஆகும் என்று நோவாக் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு நேர்மை இருந்தால், இந்த விளைவுகளை மக்களுக்குச் சொல்லுங்கள் என்றும் அவர் சவால் விட்டிருக்கிறார்.

ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாந்தர் நோவாக்
ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாந்தர் நோவாக்

2008-ம் ஆண்டுக்குப் பிறகு கச்சா பெட்ரோலிய எண்ணெய் வரலாறு காணாத அளவுக்கு நேற்று (மார்ச் 7) உயர்ந்துவிட்டது. அமெரிக்கச் சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 130 டாலரானது. பிற்பகலில் அதுவே 119 ஆக சிறிது குறைந்தது. சர்வதேச சந்தையில் இது 139 டாலராக கிடுகிடுவென உயர்ந்து சிறிது நேரம் கழித்து 123 டாலர் என்ற அளவில் நிலைபெற்றது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு முன்னால், ஒரு மாதத்துக்கு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், ‘கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வு குறித்துக் கவலைப்பட வேண்டாம், எல்லா நாடுகளும் உற்பத்தியை இப்படியே தொடர்ந்தால் சராசரியாக ஒரு பீப்பாய் 80 டாலர் என்று குறைந்துவிடும்’ என்று அமெரிக்க எரிபொருள் துறை கூறியிருந்தது. யாருமே உக்ரைன் போரை எதிர்பார்க்கவில்லை.

எனவே ரஷ்யா எச்சரிப்பது போல ஒரு பீப்பாய் 300 டாலருக்கும் மேலும் போகவே வாய்ப்பிருக்கிறது. அமெரிக்கா சொந்தமாக எண்ணெய் உற்பத்தி செய்தாலும் ரஷ்யாவிடமிருந்து அன்றாடம் 7 லட்சம் பீப்பாய்கள் வாங்கியது. இதை வாங்காமலேயே அது தன்னுடைய தேவையைப் பூர்த்திசெய்து கொள்ள முடியும். ஆனால் ஐரோப்பிய நாடுகள் அன்றாடம் 45 லட்சம் பீப்பாய் எண்ணெய் வாங்குகின்றன. இது அவை இறக்குமதி செய்யும் கச்சா பெட்ரோலியத்தில் மூன்றில் ஒரு மடங்கு. ஒரே வாரத்தில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை 26 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

பங்குச் சந்தையிலும் பாதிப்பு

உலகச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் கடுமையாக உயர்ந்த அதே வேளையில் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது. எஸ் அண்ட் பி 500 பங்குச் சந்தை ஒட்டுமொத்தமாக 3 சதவீத சரிவு கண்டது. நாஸ்டாக்கில் 3.6 சதவீதம் சரிந்தது. இந்திய பங்குச் சந்தையும் சரிந்துதொண்டே இருக்கிறது.

உக்ரைன் போர் இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in