ரஷ்யாவிடமிருந்து ஆயுத இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா சொல்லும் செய்தி என்ன?

ரஷ்யாவிடமிருந்து ஆயுத இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா சொல்லும் செய்தி என்ன?

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியா மீது அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது. அமெரிக்க உயரதிகாரிகளும் அமைச்சர்களும் இது தொடர்பாக இந்தியாவுக்கு அறிவுறுத்திவருகின்றனர். இந்தச் சூழலில், ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் விஷயத்திலும் இந்தியா மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது அமெரிக்கா.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 35 டாலர் எனும் விலையில் இந்தியாவுக்கு வழங்குவதாக ரஷ்யா கூறியிருக்கிறது. ரூபாய் - ரூபிள் பரிவர்த்தனை மூலம் இந்த இறக்குமதியை செய்துக்கொள்ளலாம் என்றும் இரு நாடுகளும் பேசியிருக்கின்றன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிருப்தியடைந்திருக்கின்றன. அமெரிக்க அரசின் சர்வதேசப் பொருளாதாரத்துக்கான தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகப் பதவி வகிக்கும் தலீப் சிங், சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது, தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுக்கலாம் என அவர் எச்சரித்திருந்தார்.

“நாங்கள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை ஒவ்வொரு நாடும் பின்பற்ற வேண்டும். இதை உலகம் முழுவதும் நாங்கள் அமல்படுத்துகிறோம்” என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் ஸாகியும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், ரஷ்ய ராணுவத் தளவாடங்கள் இறக்குமதியைத் தொடர்வது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ வில்ஸன் எனும் உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர் எனக் கருதப்படும் அவர், உக்ரைன் போர் தொடங்கிய நிலையில் ரஷ்யா குறித்து இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாட்டை விமர்சித்துவருகிறார்.

அவரது கேள்விக்குப் பதிலளித்த ஆஸ்டின், “ரஷ்ய ராணுவத் தளவாடங்களில் முதலீடு செய்வது நலனுக்கு உகந்ததல்ல என்பதை இந்தியா உணர்ந்துகொள்ள நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் பேசிவருகிறோம்” என்று ஆஸ்டின் கூறினார்.

மேலும், “நமது பெருமைக்குரிய நட்பு நாடான இந்தியா, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஆனால், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் ஆயுதங்களுக்குப் பதிலாக ரஷ்யாவின் ஆயுதங்களை வாங்க இந்தியா முடிவெடுத்தது” என்று கூறிய அவர், அமெரிக்க ஆயுதங்கள் உலகிலேயே மிகச் சிறந்தவை என்றும் குறிப்பிட்டார். ரஷ்ய ஆயுதங்களுக்குப் பதிலாக அமெரிக்க ஆயுதங்களை இந்தியா வாங்கும்படி செய்ய முயற்சிப்பதாகவும் ஆஸ்டின் சூசகமாகத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.