லெனின்கிராடு முற்றுகைக்கும் மரியுபோல் முற்றுகைக்கும் என்ன வித்தியாசம் ரஷ்யர்களே?

இரண்டாம் உலகப் போரை நினைவூட்டி வேதனை தெரிவித்த ஸெலன்ஸ்கி
லெனின்கிராடு முற்றுகைக்கும் மரியுபோல் முற்றுகைக்கும்  என்ன வித்தியாசம் ரஷ்யர்களே?

மரியுபோல் நகரில் ரஷ்யப் படைகள் நிகழ்த்தியிருக்கும் மூர்க்கமான முற்றுகை, இரண்டாம் உலகப் போரில் லெனின்கிராடு முற்றுகையிடப்பட்ட சம்பவத்துக்கு நிகரானது என உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியிருக்கிறார்.

உக்ரைன் போரின் 22-வது நாளான இன்றும் ரஷ்யப் படைகளின் தாக்குதல் வீரியம் குறையவில்லை. இதற்கிடையே, புதின் ஒரு போர்க் குற்றவாளி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதால் கோபமடைந்திருக்கிறது ரஷ்யா. இதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவில் தொடர்ந்து குண்டுவீசித் தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே, மரியுபோல் நகரில் மக்கள் பதுங்கியிருந்த திரையரங்கம் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அரங்கில் கர்ப்பிணிகளும் குழந்தைகளும் பதுங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. ‘குழந்தைகள்’ எனப் பெரிய எழுத்துகளில் அந்த அரங்கத்தின் வெளிப்புறம் எழுதப்பட்டிருந்த நிலையிலும், ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே அதைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. அதேபோல், நீச்சல் குளம் ஒன்றில் கூடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றன.

இந்நிலையில், “ரஷ்யக் குடிமக்களே, மரியுபோல் முற்றுகையிடப்பட்டிருப்பது, இரண்டாம் உலகப்போரில் லெனின்கிராடு முற்றுகையிடப்பட்டதைவிட எந்த விதத்தில் வேறுபட்டது? ஆக்கிரமிப்பாளர்களால் உயிரைப் பறிகொடுத்தவர்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாடோம்” என்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியிருக்கிறார்.

முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் உரையாற்றிய ஸெலன்ஸ்கி, ரஷ்யத் தாக்குதலை இரண்டாம் உலகப் போரின் பேர்ல் ஹார்பர் தாக்குதல் மற்றும் 2001 செப்டம்பர் 11-ல் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

இரண்டாம் உலகப் போரின்போது 1941 முதல் 1944 வரை ரஷ்யாவின் லெனின்கிராடு நகரை (தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என அழைக்கப்படுகிறது) ஹிட்லரின் நாஜி படைகள் சுற்றிவளைத்திருந்தன. பலர் நாஜிகளின் தாக்குதலில் பலியான நிலையில், ஏராளமானோர் பட்டினியால் இறந்தனர். அந்த முற்றுகையில் மொத்தம் 8 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்கின்றன வரலாற்றுத் தரவுகள்.

இதற்கிடையே, புதின் குறித்த ஜோ பைடனின் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் மன்னிக்க முடியாத வெற்றுப்பேச்சு என்று ரஷ்ய அரசின் செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கண்டித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in