இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது?

இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது?

இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித்தவித்து வருகிறது. கரோனா பேரழிவில் இருந்து உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மீண்டெழுந்த நிலையில், இலங்கை மீள முடியாத நிலையில் உள்ளது. தற்போது இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.250, ஒரு கிலோ பருப்பு ரூ.250, சர்க்கரை ஒரு கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400, உளுந்து கிலோ ரூ.2,000 என அனைத்து பொருட்களின் விலையும் இறக்கை கட்டிப் பறக்கின்றன. இவற்றை வாங்க சக்தியற்ற நிலையில் மக்கள் கடும் மன அழுத்தத்திற்கும், துயரத்திற்கும் உள்ளாகியுள்ளனர். அத்துடன் அன்றாடம் ஏழு மணி நேர மின்தடை, எரிபொருள் கிடைக்காததால் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைப்பால் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். பொதுப்போக்குவரத்தால் கரோனா மீண்டும் பரவும் அபாயம் என இலங்கையின் நிலை சொல்ல முடியாத துயரத்திற்குள்ளாகியுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தின் ஊற்றுக்கண்ணான சுற்றுலாதொழில் நசிந்து கிடக்கிறது. இதனால் இத்தொழிலை நம்பியிருந்த லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இந்த நிலையில் தான், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி தன்னெழுச்சியாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தத் துவங்கியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணம் அறிய இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் பாரதி ராஜநாயகத்திடம் பேசினோம். அவரிடம் சில கேள்விகளையும் முன் வைத்தோம்.

பாரதி ராஜநாயகம்
பாரதி ராஜநாயகம்

இலங்கையில் ஏன் இந்த பாதிப்பு?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பிரதான காரணமே ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் போதிய அளவு தற்போது கிடைக்காதது தான். இதன் காரணமாகத்தான், பெரும் நெருக்கடியை நாடு சந்தித்துள்ளது. அத்துடன் பெருமளவு வெளிநாட்டிற்கு பணம் செல்வதன் காரணமாகவும், உள்நாட்டிற்கு அது திரும்பி வராததன் காரணமாகவும் மீளமுடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாக ஒன்றரை வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த இலங்கையர்களிடமிருந்து வரக்கூடிய வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. மேலும், இலங்கைக்கு அதிக அளவு அந்நிய செலாவணியை பெற்றத்தந்த உல்லாச பயணத்திட்டங்கள் (சுற்றுலா) தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நெருக்கடிகளின் உச்சக்கட்டமாகத்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு பணம் வழங்க முடியாத நிலைக்கு இலங்கை சென்றுள்ளது. இதனால் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் இலங்கை கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத்தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

இந்த நெருக்கடியை சமாளிக்க அரசு சில பொருளாதார கொள்கைகளைக் கடைபிடித்தன. ஆனால், அவை தவறானவை என்று விமர்சிக்கப்படுகின்றன. குறிப்பாக பணத்தாளை அச்சிடுவதன் மூலம் இப்பிரச்சினையை சமாளிக்கலாம் என அரசு எதிர்பார்த்தது. கடந்த வாரம் பல மில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இது இலங்கையில் மிகப்பெரிய பணவீக்கத்திற்கும், பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை தான் கடந்த வாரம் காண முடிந்தது.

இந்த நிலைமைகளை சீர் செய்ய சர்வதேச அழுத்தம் காரணமான இலங்கை அரசு கையாண்ட மற்றொரு தவறான நடவடிக்கை, ரூபாய் மீதான தட்டுப்பாட்டை தளர்த்தியது. இதனால், இலங்கை ரூபாயை மிதக்க விடுவது என்ற ஏற்பாட்டை அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு 200 ரூபாயிலிருந்து 280 ரூபாய் என்ற அளவை தாண்டிச் சென்றுள்ளது. இலங்கை அரசின் இந்த ஏற்பாடு, விலை உயர்வை மேலும் அதிகரிக்க காரணமாகி விட்டது. இதனால் பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இவற்றை இலங்கை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் பொருளாதாரம் திட்டமிடப்பட்ட முறையில் செயல்படுத்தப்படவில்லை. நான்கு புறம் கடலால் சூழப்பட்ட நாடாக இருந்தாலும் டின் மீன்கள், கருவாடு போன்ற பொருட்கள் தடையின்றி இலங்கையில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதே வேளையில் இலங்கை ஒரு விவசாய நாடாகவும் உள்ளது. ஆனாலும் பால் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்ளூர் உற்பத்திகளைப் பெருக்காமல் இறக்குமதிகளையே பெருமளவு நம்பியிருந்த காரணத்தால் அந்நிய செலாவணி பிரச்சினை இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உள்ளூர் உற்பத்திகளை அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலமே மக்களுக்கு அரசு நம்பிக்கையூட்ட முடியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in