என்ன ஆயிற்று காலிதாவுக்கு?

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா
வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா

இந்தக் கேள்விதான் கடந்த சில வாரங்களாக வங்கதேசத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. அவரது உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகள் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில், தமிழகத்தில் நிலவிய வதந்திகளுக்கு நிகரான போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன.

இதற்கிடையே, மேல்சிகிச்சைக்காக காலிதா ஜியாவை வெளிநாட்டுக்கு அனுப்ப ஷேக் ஹசீனா அரசு மறுப்பதாக, காலிதாவின் வங்கதேச தேசியக் கட்சி (பிஎன்பி) தலைவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். அந்தக் கட்சிக்குள் நிலவும் பூசலும் அந்நாட்டு அரசியல் களத்தைச் சூடாக்கியிருக்கிறது.

மூன்று முறை பிரதமர் பதவிவகித்த காலிதா ஜியாவுக்குத் தற்போது 76 வயதாகிறது. வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் எனும் பெருமையும் அவருக்கு உண்டு. ஊழல் வழக்கு ஒன்றில் 2018 பிப்ரவரியில் சிறையிலடைக்கப்பட்டார் காலிதா. கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் 25-ல் அவர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் 4 முறை அவரது தற்காலிக விடுதலைக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, கடந்த ஏப்ரலில் அவருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்தார். எனினும், சில நாட்களுக்குப் பின்னர் உடல்நிலை மோசமானதால் ஏப்.27-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், சில நாட்களுக்குப் பின்னர் வீடு திரும்புவதுமாக இருந்தார்.

நவ.13 முதல், கல்லீரலில் ஏற்பட்ட அழற்சி காரணமாக தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். காலிதாவுக்குக் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தீவிர சிகிச்சைக்குப் பின்னர், ரத்தக்கசிவு தற்போது மட்டுப்பட்டிருந்தாலும் மீண்டும் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்வதுதான் அவரது உயிரைக் காப்பாற்றும் என மருத்துவர்கள் கூறிவரும் நிலையில், அதற்கு அரசு ஒத்துழைக்காது என்பது நன்றாகத் தெரிந்துவிட்டது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவரான காலிதாவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல நீதிமன்றம் விதித்திருந்த தடை, இப்போது காலிதாவின் உயிருக்கு உலைவைக்குமோ எனப் பேசப்படுகிறது.

வங்கதேசப் பிரதமரும் காலிதாவின் அரசியல் எதிரியுமான ஷேக் ஹசீனா, “காலிதாவுக்காக என்னால் என்ன முடியுமோ அதைச் செய்துவிட்டேன். அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சட்டம் முடிவுசெய்யும்” என்று கைவிரித்துவிட்டார். வங்கதேச தேசியக் கட்சித் தலைவர்களோ, சிகிச்சைக்காகக் காலிதாவை வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்திவருகிறார்கள். தவிர, ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வெளிநாடு செல்ல தடை இருப்பதாக அரசு முன்வைக்கும் வாதங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கு முன்னர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜாதிய சமாஜ்தாந்த்ரிக் தளம் (ஜேஎஸ்டி) தலைவர் ஏ.எஸ்.எம்.அப்துர் ரப், மேல்சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஷேக் ஹசீனாவுக்கு எதிராகப் போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. காலிதாவுக்கு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று, வங்கதேச தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் மிர்ஸா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் எச்சரித்திருக்கிறார்.

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா

இதற்கிடையே, காலிதா ஏற்கெனவே மரணமடைந்துவிட்டதாகவும் அதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்படாமல் இருப்பதாகவும் வதந்திகள் வேகமாகப் பரவுகின்றன. காலிதாவுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் விளக்கமளித்தப் பின்னரும் இந்த வதந்திகள் தொடர்கின்றன.

இன்னொரு புறம், வங்கதேச தேசியக் கட்சிக்குள்ளேயே பல குழப்பங்கள் நிலவுகின்றன. காலிதாவின் மகன் தாரிக் ரஹ்மான், தற்போது லண்டனில் வசிக்கிறார். அவர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 2008-ல் காலிதா ஜியா சிறையிலிருந்து விடுதலையாகியிருந்த நிலையில், லண்டனுக்குச் சென்றார் தாரிக். அப்போது ராணுவத்தின் ஆதரவுடன் நடந்த இடைக்கால அரசு, தாரிக் இனி நாடு திரும்ப மாட்டார் என அறிவித்தது (காலிதா ஜியா மட்டுமல்ல, ஷேக் ஹசீனாவும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பெயரில் சிறையில் அடைக்கப்பட்டு, 2008 தேர்தல் நேரத்தில் விடுதலை செய்யப்பட்டனர்).

தற்போது, ஜியா காலிதாவின் உடல்நிலை குறித்த சர்ச்சைகள் உச்சம் பெற்றிருக்கும் நிலையில், அந்த அனுதாப அலையைப் பயன்படுத்தி நாடு திரும்பலாம் என தாரிக் விரும்புகிறார். எனினும், அவரது மீள்வருகையைக் கட்சிக்குள்ளேயே ஒரு தரப்பினர் விரும்பவில்லை. லண்டனிலிருந்தபடி கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள தாரிக் விரும்புவதாக ஏற்கெனவே அவர் மீது கட்சிக்குள் புகைச்சல் உண்டு. ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர தருணம் பார்த்துவரும் வங்கதேச தேசியக் கட்சித் தலைவர்கள், ஹசீனா ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு அவரது ஆட்சிக்கு முடிவுரை எழுதக் காத்திருக்கின்றனர். ஆனால், அவாமி லீக் அரசு இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. பிரச்சினை எழுந்தால் அதை அடக்குவதற்கும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக வங்கதேச அரசியல் களத்தை, மோதல் களமாகவே வைத்திருந்தனர் காலிதாவும் ஹசீனாவும். தற்போது காலிதாவின் கடைசிக் காலத்திலும் நிலைமை இன்னமும் சீராகவில்லை. அரசியல் பகைமையின் உச்சகட்டக் கசப்பின் உதாரணமாகியிருக்கிறது வங்கதேசம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in