இந்தியாவுடனான 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்வோம் - மாலத்தீவு அதிரடி அறிவிப்பு!

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்

இந்தியாவுடனான 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மாலத்தீவின் புதிய அரசு மறு ஆய்வு செய்யும் என அந்நாட்டு அரசு உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். அதிபராக பதவியேற்றவுடன் உரையாற்றிய முகமது மூயிஸ், 'மாலத்தீவின் இறையாண்மை, சுதந்திரத்தைப் பாதுகாக்க அந்நிய நாட்டு ராணுவம் இல்லாத மாலத்தீவாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றாா்.

செப்டம்பரில் நடைபெற்ற அதிபா் தேர்தல் பிரச்சாரத்திலும் இந்திய ராணுவத்தை மாலத்தீவிலிருந்து வெளியேற்றுவதாக அவா் வாக்குறுதி அளித்திருந்தாா்.

மூயிஸுடன் கிரன் ரிஜுஜு
மூயிஸுடன் கிரன் ரிஜுஜு

இந்தச் சூழலில், அதிபா் முகமது மூயிஸை சனிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜுவிடம், மாலத்தீவில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அவா் வேண்டுகோள் விடுத்தாா்.

இந்நிலையில், செய்தியாளா் சந்திப்பில் பேசிய அதிபா் அலுவலகத்தின் பொதுக் கொள்கைக்கான துணை செயலா் முகமது பிா்ஸுல் அப்துல் கலீல், 'மருத்துவ மீட்புப் பணிகளுக்காக இந்தியா வழங்கிய முதல் ஹெலிகாப்டரை கையாள 24 வீரா்கள், டாா்னியா் விமானத்தைக் கையாள 25 வீரா்கள், 2-ஆவது ஹெலிகாப்டரை கையாள மேலும் 26 வீரா்கள், பராமரிப்பு மற்றும் பொறியியல் பிரிவில் 2 வீரா்கள் என மொத்தம் 77 இந்திய ராணுவ வீரா்கள் மாலத்தீவில் உள்ளனா்.

அவா்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளை அதிபா் மூயிஸ் தொடங்கியுள்ளாா். இந்தியாவுடன் உத்ரு திலா ஃபல்ஹு துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் என 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையொப்பமிட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்கள் புதிய அரசால் மறு ஆய்வு செய்யப்படும்' என்றாா்.

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்

பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி, மாலத்தீவில் நிலைகொண்டுள்ள இந்திய ராணுவ வீரா்களின் சரியான எண்ணிக்கையை வெளியிட முந்தைய அரசு மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013 முதல் 2018 வரையில் அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டாா். அதன்பிறகு இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிபா் முகமது சோலியை முகமது மூயிஸ் தற்போதைய தேர்தலில் தோற்கடித்து அதிபராகி உள்ளாா். அப்துல்லா யாமீனைப் போலவே முகமது மூயிஸ் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவாா் என்று கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in