‘உக்ரைன் கோரும் ராக்கெட் லாஞ்சர்களை வழங்கப்போவதில்லை’ - கைவிரித்த ஜோ பைடன்

‘உக்ரைன் கோரும் ராக்கெட் லாஞ்சர்களை வழங்கப்போவதில்லை’ - கைவிரித்த ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

டோன்பாஸ் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்க ராக்கெட் லாஞ்சர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் கோரிவந்த நிலையில், உக்ரைனிலிருந்து ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குத் திறன் கொண்ட ராக்கெட் லாஞ்சர்களை அனுப்பப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கத் தயாரிப்பு ராணுவத் தளவாடங்களில் எம்.எல்.ஆர்.எஸ் (மல்ட்டிபிள் லாஞ்ச் ராக்கெட் சிஸ்டம்ஸ்) வகை ராக்கெட் லாஞ்சர்கள் புகழ்பெற்றவை. 20 முதல் 40 மைல்கள் செல்லக்கூடிய ராக்கெட்டுகள் முதல் 185 மைல்கள் சென்று தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள் வரை இதில் பல்வேறு வகைகள் உண்டு. லுஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்திருக்கும் நிலையில், அந்தப் பகுதிகளில் ஆயுதங்களைக் குவிக்கும் ரஷ்யாவின் முயற்சியை முறியடிக்க தொலைதூரம் சென்றுன் தாக்கும் எம்.எல்.ஆர்.எஸ் ராக்கெட் லாஞ்சர்கள் போன்ற கனரக தளவாடங்கள் தேவை என உக்ரைன் கோரியிருந்தது.

எனினும், உக்ரைனுக்கு அவற்றை அனுப்ப அமெரிக்கா தயங்குவதாகச் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. ஒருவேளை அவற்றைப் பயன்படுத்தி ரஷ்யப் பகுதிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால், அது தங்களுக்கும் நேட்டோவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் எனும் எண்ணம்தான் அமெரிக்காவின் தயக்கத்துக்குக் காரணம் என்று அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர்கள் விளக்கமளித்திருந்தனர். ஏற்கெனவே, ரஷ்ய நிலப் பகுதிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை மனதில் கொண்டே அமெரிக்கா தயங்குவதாகவும் சொல்லப்பட்டது.

ராக்கெட் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை உக்ரைனுக்கு அனுப்ப அதிபர் ஜோ பைடன் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், அவற்றில் எம்.எல்.ஆர்.எஸ் ராக்கெட் லாஞ்சர்களும் அடங்குமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், “ரஷ்யா மீது தாக்குதல் நடத்தக்கூடிய ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு நாங்கள் அனுப்பப்போவதில்லை” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதன் மூலம், உச்சகட்ட நெருக்கடியில் இருக்கும் உக்ரைன், தற்காப்புக்காக விடுத்த முக்கியக் கோரிக்கை அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

பைடனின் இந்த முடிவை ரஷ்யாவின் முன்னாள் அதிபர் திமித்ரீ மெத்வதேவ் வரவேற்றிருக்கிறார். ரஷ்ய நகரங்கள் தாக்கப்பட்டால் பதிலடி தரப்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். இவ்விஷயத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவைத்தான் பிரிட்டனும் பின்பற்றும் என்பதால், பிரிட்டனிடம் உக்ரைன் எதிர்பார்த்திருந்த எம்270 ரக ராக்கெட் லாஞ்சர்களும் அந்நாட்டுக்கு அனுப்பப்படாது என்றே தெரிகிறது. நேட்டோவின் பிற உறுப்பு நாடுகளும் அமெரிக்காவின் இந்த முடிவைப் பின்பற்றியே இவ்விஷயத்தில் முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in