‘எல்லையைப் பாதுகாக்க எங்களுக்கு ரஷ்யாவின் உதவி அவசியம்’ - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்கோப்புப் படம்

தாராளமய உலகத்தின் உறுதியான நண்பராக இருக்கவே இந்தியா விரும்புகிறது; அதேசமயம் எல்லையைக் காக்க ரஷ்யாவின் உதவி தேவைப்படுகிறது எனக் கூறியிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

உக்ரைன் போர்ச்சூழலிலும் இந்தியா ரஷ்யாவுடனான உறவைப் பேணுவதையும் அந்நாட்டிடமிருந்து எண்ணெய், ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதைத் தொடர்வதையும் மேற்கத்திய நாடுகள் அதிருப்தியுடன் கவனித்துவருகின்றன. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவை இந்தியா கண்டிக்காதது குறித்தும் அந்நாடுகள் அதிருப்தியடைந்திருக்கின்றன.

எனினும், இந்தியா விஷயத்தில் மேற்கத்திய நாடுகள் சமநிலையுடன் நடந்துகொள்ளவே செய்கின்றன. பெரும் போட்டியாளராக இருக்கும் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவின் உறவு அமெரிக்காவுக்குத் தேவையாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவை நன்கு உணர்ந்திருக்கிறார். அதனால்தான் ரஷ்யாவுடனான நீண்டநாள் உறவை இந்தியா கைவிடுவது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் நிர்மலா சீதாராமன் தலைநகர் வாஷிங்டனில் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றின் வருடாந்திர கூட்டங்களில் கலந்துகொள்ளவும், பல்வேறு தொழிலதிபர்களைச் சந்திக்கவும் அவர் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்.

அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கின்றன; இரு நாடுகளுடனும் இந்தியா போர் புரிந்திருக்கிறது; எனவே, இந்தியாவின் பிராந்திய நலனைப் பாதுகாப்பது அவசியமாகிறது எனும் கருத்தை அந்தப் பேட்டியில் அவர் பதிவுசெய்திருக்கிறார்.

“இரு அண்டை நாடுகளும் கைகோத்து எங்களுக்கு எதிராக இருக்கும் சூழலில், உக்ரைன் போரின் பின்னணியில் கூட்டணிகள் உருவாக்கப்பட்டால், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்கு இந்தியா வலிமையானதாக இருக்க வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டிருக்கும் அவர், “ஐரோப்பிய ஒன்றியம், மேற்கத்திய - தாராளமய உலகுடன் நட்பாக இருக்கவே இந்தியா விரும்புகிறது. ஆனால், அவநம்பிக்கையுடன் அங்கும் இங்கும் உதவி கோரும் பலவீனமான நண்பராக அல்ல” என்று அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in