போர் குற்றவாளி ஆனாலும் புதினை கைது செய்ய முடியுமா?

போர் குற்றவாளி ஆனாலும் புதினை கைது செய்ய முடியுமா?

நேட்டோவில் சேர மாட்டோம் என உக்ரைன் பணிந்தாலும் அதன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்துவதாக இல்லை. ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போரில் இரு தரப்பும் ஆளுக்கொரு புள்ளிவிவரத்தை காட்டுவதால் உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து துல்லியமான விவரங்கள் இல்லை. ஆனால், குடியிருப்புகள் மீது குண்டுகள் பொழியும் காட்சிகள் நடுநடுங்க வைப்பதாக இருக்கின்றன. அப்பாவி மக்கள் மடிந்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருக்கிறது.

மரியுபோல் நகரத்தில் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். நோயாளிகள், ஊழியர்கள் என 17 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில்தான் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை போர் குற்றவாளி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளித்திருக்கிறார்.

ஆனால் வெள்ளை மாளிகை அலுவலகமோ, “அது பைடனின் இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள், அவ்வளவுதான்” என அடக்கி வாசிக்கிறது. ஏனெனில் ஒரு நாட்டையோ, அதை ஆளுபவரையோ போர் குற்றவாளி என அறிவிப்பது அவ்வளவு லேசான காரியமல்ல.

போரே ஒரு குற்றம்தான், அதில் என்ன தனியாக, ‘போர் குற்றம்’ என சிலர் கேட்கலாம். போருக்கும்கூட விதிமுறைகள் இருக்கின்றன. செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டு குழு அதனை வடிவமைத்திருக்கிறது. அதோடு, ஜெனிவா மாநாடுகள், பன்னாட்டு சட்டங்கள், ஒப்பந்தங்களில் இது தொடர்பான விதிமுறைகள் ஏராளம் இருக்கின்றன. அதில் பொதுவான சில அம்சங்கள் உண்டு.

போரின்போது அப்பாவி குடிமக்களையோ, அவர்களது வாழ்வாதாரத்தையோ எந்த காரணம் கொண்டும் தாக்கக்கூடாது. ரசாயன, உயிரி ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. காயமடைந்தவர்களையும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பது அவசியம். ராணுவ வீரர்கள் பிடிபட்டால் அவர்களை சிறைப்படுத்தத்தான் முடியும்; கொல்லக்கூடாது. இனப்படுகொலை, சித்ரவதையும் கூடவே கூடாது. பாலியல் வன்கொடுமை, மொத்தமாக கொல்லுதல் என இன்னும் பல கொடும் குற்றங்களும் போர் குற்றங்களின் பட்டியலில் இருக்கின்றன. இவற்றை மீறும் நாடுதான் போர் குற்றவாளி.

விளாதிமிர் புதினை போர் குற்றவாளி என ஜோ பைடன் அழைத்தாலும், உக்கரைனும், பிரிட்டனும் ரஷ்யாவை போர் குற்றம் புரிந்துள்ள நாடாக விளித்தாலும் அவற்றை சட்டப்படி நிரூபிக்க வேண்டியது அவசியம். மரியுபோல் நகரில் அப்பாவி குடிமக்கள் தங்கவைக்கப்பட்ட அரங்கில் ரஷ்யா குண்டு போட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. மருத்துவனை மீதான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். நகரங்களை விட்டு வெளியேறும் உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் ரஷ்யா குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரே நேரத்தில் சிதறித் வெடிக்கும் கொத்துக்குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.

ஆனால், இவை அனைத்தையும் நிரூபித்து ரஷ்யாவை குற்றவாளியாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. போர் குற்றம் தொடர்பாக எந்த நாடும் விசாரிக்க முடியும் என்றாலும், பன்னாட்டு அளவில் குறிப்பிடத்தக்க சில வழிகள் இருக்கின்றன. அவற்றுக்கும்கூட ஒரு எல்லை உண்டு. அதில், ஒன்று, பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice). இது நாடுகளுக்கிடையேயான பிரச்சினை குறித்து மட்டுமே விசாரிக்கும்; தனி நபர்களைப் பற்றியல்ல. (அதாவது புதினை போர் குற்றவாளியாக விசாரிக்க முடியாது).

ஒருவேளை, ரஷ்யாவுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றம் உத்தரவு ஏதேனும் பிறப்பித்தால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் கடமை. அதில் உள்ள 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்று ரஷ்யா. தனக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முயன்றால் தனக்கான வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை எதுவும் இல்லாமல் செய்துவிட ரஷ்யாவால் முடியும்.

பன்னாட்டு கிரிமினல் நீதிமன்றம் (International Criminal Court) ஒரு தனி நபரை போர் குற்றவாளியாக விசாரிக்க முடியும். இந்த நீதிமன்றத்தை சார்ந்த வழக்கறிஞர்கள் போர் குற்றம் நடந்திருக்கிறதா என ஆய்வு செய்வார்கள். முகாந்திரம் இருந்தால் காரணமானவர்களை கைது செய்ய ஆணை பிறப்பிக்குமாறும், தி ஹேக் நகரில் விசாரணையை தொடங்குமாறும் நீதிபதிகளுக்கு பரிந்துரை செய்வார்கள். ஆனால், இந்த நீதிமன்ற அதிகாரத்திற்கும் எல்லை உண்டு. போர் குற்றம் புரிந்தவரை கைது செய்ய தனியாக காவல் படை இந்த நீதிமன்றத்திற்குக் கிடையாது. அமெரிக்காவைப் போல ரஷ்யா இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர் கிடையாது. (2016-ம் ஆண்டு வெளியேறி விட்டது). அதனால், போர் குற்றவாளிகளாக யாரையாவது அறிவித்தால் புதின் அவர்களை நாடு கடத்துமாறு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஒருவேளை அவர்கள் வேறு நாட்டிற்குச் சென்றால் அங்கு வைத்து கைது செய்யலாம். அதற்கு சாத்தியம் மிகவும் குறைவு. உறுப்பு நாடாக இல்லாத காரணத்தால் பன்னாட்டு கிரிமினல் நீதிமன்றம் ரஷ்யாவை ஒன்றும் செய்யமுடியாது. ஒருவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலே முன்வந்து பன்னாட்டு கிரிமினல் நீதிமன்றம் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டாலும் கூட, ரஷ்யாவிடம் இருக்கவே இருக்கிறது வீட்டோ அதிகாரம். ஐ.நா.வின் வேண்டுகோளை ஒரு நொடியில் நிராகரித்து இல்லாமல் ஆக்கிவிடும்.

இதையெல்லாம் தாண்டி சில நாடுகள் ஒன்றிணைந்து ஒரு விசாரணை தீர்ப்பாயத்தை அமைக்கலாம். நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவை கை கோக்கலாம். இரண்டாம் உலகப் போருக்கு பின் ஜெர்மனியின் நாசி படையினரை விசாரிக்க இப்படி ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. ஆனால், பலம் பொருந்திய ரஷ்யாவின் விஷயத்தில் இது எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை.

அதேசமயம், நாடுகளின் தலைவர்களை போர் குற்றங்களுக்காக தண்டித்த வரலாறும் நம்மிடம் இருக்கிறது. கம்போடியா, ருவான்டா, போஸ்னியா நாடுகளின் பிரச்சினையில் அந்நாட்டின் மூத்த தலைவர்கள் மீது தீர்ப்பாயங்கள் விசாரணை நடத்தியுள்ளன. போஸ்னியா, குரோஷியா போர் தொடர்பான குற்றங்களுக்காக ஐ.நா. அமைத்த தீர்ப்பாயம் யுகோஸ்லோவியா முன்னாள் அதிபர் ஸ்லோபோடன் மிலோஸ்விச்சை விசாரித்திருக்கிறது. ஆனால், தீர்ப்பு வரும் முன்பாகவே தி ஹேக் நகரில் உள்ள சிறையில் அவர் இறந்துவிட்டார். ரோடோவன் கராட்சிச், ஜெனரல் ரட்கோ ம்லாடிச் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்கள் தற்போது ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். சியரா லியோனில் அடக்குமுறைக்கு காரணமான குற்றத்திற்காக லிபேரியா முன்னாள் அதிபர் டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ரஷ்ய அதிபர் புதினுக்கு அப்படியான ஒரு நிலை எல்லாம் அவ்வளவு எளிதில் வந்துவிடாது என்பதே நிதர்சனம்.

Related Stories

No stories found.