‘சென்டாரஸ்’ - கவலையூட்டும் புதிய துணைத் திரிபு

‘சென்டாரஸ்’ - கவலையூட்டும் புதிய துணைத் திரிபு

ஒமைக்ரான் திரிபின் இன்னொரு துணைத் திரிபாக இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாகப் பரவிவருகிறது சென்டாரஸ் வைரஸ். பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவிவரும் இந்தத் துணைத் திரிபு எந்த அளவுக்கு ஆபத்தானது?

கரோனா வைரஸின் திரிபான ஒமைக்ரான் வைரஸின் பிஏ.2.75 துணைத் திரிபே ‘சென்டாரஸ்’ என அழைக்கப்படுகிறது. மே மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் இது முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. ஏற்கெனவே இந்தியாவில் பரவியிருக்கும் பிஏ.5 எனும் திரிபைவிடவும் பிஏ.2.75 வைரஸ் வேகமாகப் பரவுகிறது. பல்வேறு நாடுகளில் பிஏ.2 திரிபு வைரஸைவிடவும் அதிவேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 10 நாடுகளில் இதன் பரவல் அதிகம் என நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சென்டாரஸ் துணைத் திரிபை, கண்காணிக்கப்படும் திரிபாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் (இசிடிசி), ஜூலை 7-ல் அறிவித்தது. இப்படி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வைரஸ் அதிகமாகப் பரவக்கூடியதாக அல்லது தீவிரமான நோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என ஊகங்கள் எழுந்திருக்கின்றன. எனினும், இதன் தீவிரத்தன்மை இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.

இதன் தீவிரத்தன்மையை ஆராயும் அளவுக்குப் போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார். எனினும், இந்தத் துணைத் திரிபை உலக சுகாதார நிறுவனம் உன்னிப்பாகக் கவனித்துவருகிறது.

சென்டாரஸ் துணைத் திரிபு பல நாடுகளில் பரவுவதன் அடிப்படையில், பிஏ.2 திரிபைப் போல இதுவும் கூடுதலான பிறழ்வுகள் (உருமாற்றம்) கொண்டிருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. பிஏ.2 திரிபிலிருந்து இந்தத் துணைத் திரிபு உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பிஏ.5 திரிபுக்குப் பிறகுத் தீவிரத் தன்மை கொண்ட துணைத் திரிபு இது என நிபுணர்கள் கருதுகிறார்கள். இது பிறழ்வுத்தன்மை அடையும் வேகம் உள்ளிட்டவை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in