‘உக்ரைனியர்களை விடுவித்து உங்கள் நண்பரை மீட்டுக்கொள்ளுங்கள் புதின்!’

அதிபர் ஸெலன்ஸ்கி ஆவேசம்
விக்டர் மெட்வெசக்
விக்டர் மெட்வெசக்

ரஷ்ய அதிபர் புதினின் நண்பரும், உக்ரைன் எதிர்க்கட்சித் தலைவருமான விக்டர் மெட்வெசக்கை உக்ரைன் ராணுவம் அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது. ‘மின்னல் வேக மற்றும் ஆபத்தான’ ராணுவ நடவடிக்கையில் அவரைப் பிடித்திருப்பதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் ராணுவ உடையில், கைகளில் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் காணப்படும் மெட்வெசக்கின் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவேற்றியிருக்கிறார் அதிபர் ஸெலன்ஸ்கி.

யார் இந்த மெட்வெசக்?

பெரும் தொழிலதிபர். உக்ரைனின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ‘ஆப்போசிஷன் ப்ளாட்ஃபார்ம் ஃபார் லைஃப்’ எனும் கட்சியின் தலைவர். இக்கட்சி ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டது. புதினுக்கு மிக நெருக்கமானவர். புதினை அவரது மகள் ஒரு ஞானத்தந்தையாகக் கருதும் அளவுக்கு நெருக்கம். ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் பெரும் செல்வம் சேர்த்தவர்.

உக்ரைன் ராணுவ ரகசியங்களை ரஷ்யாவுக்கு விற்றதாகவும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட க்ரைமியா பகுதியில் இயற்கை வளங்களைச் சுரண்டியதாகவும் மெட்வெசக் மீது புகார்கள் உண்டு. அதன் அடிப்படையில், தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய மூன்றாவது நாள் வீட்டுக்காவலிலிருந்து தப்பி தலைமறைவானார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிராக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கும் அமெரிக்கா, புதினின் நண்பர் எனும் முறையில் அவர் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது.

இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக, 11 எதிர்க்கட்சிகளை அதிபர் ஸ்லென்ஸ்கி மார்ச் மாதம் தடை செய்தார். அவற்றில் மெட்வெசக்கின் ‘ஆப்போசிஷன் ப்ளாட்ஃபார்ம் ஃபார் லைஃப்’ கட்சி முதன்மையானது. பிற கட்சிகள் சிறியவை. ஆனால், மெட்வெசக்கின் கட்சிக்கு உக்ரைன் நாடாளுமன்றத்தில் 44 உறுப்பினர்கள் உள்ளனர் (மொத்த இடங்கள் 450).

இத்தகைய சூழலில், மெட்வெசக்கைத் தேடும் பணியில் உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது. எனினும் அவர் எங்கு, எப்படி கைதுசெய்யப்பட்டார் எனும் தகவல்கள் வெளியாகவில்லை.

உக்ரைன் ராணுவ உடை அணிந்திருக்கும் நிலையில் கைதுசெய்யப்பட்டிருக்கும் விக்டர் மெட்வெசக்
உக்ரைன் ராணுவ உடை அணிந்திருக்கும் நிலையில் கைதுசெய்யப்பட்டிருக்கும் விக்டர் மெட்வெசக்

பாதுகாப்புப் படையான எஸ்பியூ-வின் தலைவர் இயான் பகானோவ், மெட்வெசக்கைப் பிடிக்க உதவிய உளவு அதிகாரிகள், விசாரணை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். மின்னல் வேக மற்றும் ஆபத்தான சிறப்புப் பணியில் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டதாக அவர்களைப் பாராட்டியிருக்கிறார்.

மெட்வெசக் கைதால் மிகுந்த உற்சாகமடைந்திருக்கும் ஸெலன்ஸ்கி, “உங்கள் ஆளை விடுவிக்க வேண்டுமெனில், ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் எங்கள் பையன்களையும் பெண்களையும் விடுவிக்க வேண்டும்” என்று ரஷ்யாவை அறிவுறுத்தியிருக்கிறார்.

ரஷ்யாவின் எதிர்வினை

மெட்வெசக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டபோதே புதின் கடும் கோபம் அடைந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். தற்போது மெட்வெசக் கைதுசெய்யப்பட்டிருப்பதால் ரஷ்யா கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது. எனினும், இந்தச் செய்தி உண்மையாக இருக்காது என்றே ரஷ்யத் தரப்பு தெரிவிக்கிறது.

“உக்ரைனிலிருந்து ஏராளமான போலிச் செய்திகள் வெளியாகின்றன. இந்தச் செய்தியை முதலில் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது” என்று ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியிருக்கிறார்.

தங்க ரயில், சொகுசுக் கப்பல்...

மெட்வெசக் வீட்டுக்காவலிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த உக்ரைன் அதிகாரிகள் அதிசயித்து நின்றனர். புகழ்பெற்ற புல்மேன் ரயிலைப் போல் உருவாக்கப்பட்ட ரயில் பொம்மை ஒன்று அங்கு இருந்தது. அதில் தங்க வேலைப்பாடுகள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் விலையுயர்ந்த பல பொருட்கள் தார்பாலின் போட்டு மூடப்பட்டிருந்தன.

மெட்வெசக்குக்குச் சொந்தமான 93 மீட்டர் நீளம் கொண்ட ராயல் ரொமான்ஸ் எனும் சொகுசுக் கப்பல், குரேஷியா நாட்டின் ரிஜெக்கா துறைமுகத்தில் கடந்த மாதம் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in