வியட்நாமைப் புரட்டியெடுக்கும் கரோனா 4-வது அலை

வியட்நாமைப் புரட்டியெடுக்கும் கரோனா 4-வது அலை

ஹோ சி மின் நகரில் பரவும் பதற்றம்

பெருந்தொற்று ஆபத்து எப்போது வேண்டுமானாலும் வீரியம் எடுக்கலாம் என்பதற்கு, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பாடங்கள் கிடைக்கின்றன. கரோனா வைரஸின் 4-வது அலையில் சிக்கித் தவிக்கும் வியட்நாம் ஓர் உதாரணம். இத்தனைக்கும் கரோனா முதல் அலையின்போது, பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பாராட்டப்பட்ட தேசம் வியட்நாம். கரோனா வைரஸ் பரவல் தொடங்கிய சீனாவின் அண்டை நாடாக இருக்கும் நிலையிலும் வியட்நாம் அதைச் செய்துகாட்டியது. இன்று நிலைமை தலைகீழ்!

வியட்நாமில், கோவிட் 19 பரவலின் 4-வது அலை கடந்த ஏப்ரல் 27-ல் தொடங்கியது. டெல்டா வைரஸ் பரவல் வியட்நாமை உலுக்கியெடுக்கிறது. இது தடுப்பு ஊசிகளுக்கும் கட்டுப்படாமல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. வியட்நாமில் டெல்டா வைரஸ் பரவலுக்கு முன்னதாக ஆரம்பக் கட்டத்தில் 4,000 பரவலுக்கு கோவிட் 19 அறிகுறிகள் தெரிந்தது, இறந்தவர் எண்ணிக்கை 35. இப்போது டெல்டா வைரஸ் பரவலுக்குப் பிறகு, நாடு முழுவதும் 5,20,000 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு அதில் 13,000 பேர் இறந்துள்ளனர்.

நிலைமை மோசமடையத் தொடங்கிய உடனேயே, ஜூன் மாதம் அந்நாட்டில் முழுவீச்சில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைவரும் வீடுகளைவிட்டு வெளியே வரக்கூடாது என்று தடுக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள், வழிபாட்டிடங்கள் என்று அனைத்தும் மூடப்பட்டன. எனவே தொழில், வியாபாரம் அனைத்தும் முடங்கின. விவசாய வேலைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. அத்தியாவசியப் பணிகள் விலக்கு பெற்றன.

தவித்துப்போன ஹோ சி மின்

அதிலும், அந்நாட்டின் முக்கிய நகரமான ஹோ சி மின் மிகவும் பாதிக்கப்பட்டது. ஹோ சி மின் நகர மக்கள்தொகை 90 லட்சம். அங்கே நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வந்து வேலை செய்வோர் எண்ணிக்கை 35 லட்சத்துக்கும் மேல். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பெருந்தொற்று காலத்தில் மக்கள் என்னென்ன சிரமங்களுக்கு ஆளானார்களோ, அத்தனை சிரமங்களையும் ஹோ சி மின் மக்கள் எதிர்கொண்டனர்.

வேலையில்லாததால் கையில் பணம் இல்லாமல் திண்டாடினர். அரசால் எல்லோருக்கும் உணவு வழங்க முடியவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர்களின் வாடகை நச்சரிப்புக்கு ஆளாகினர். அடுத்து அன்றாடம் சாப்பிட போதிய உணவு கிடைக்காமல் திண்டாடினர். பாட்டிலில் அடைத்த தூய குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. குழந்தைகளுக்குப் பால் வாங்கக்கூட காசில்லாமல் திண்டாடினர். தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள் செய்த உதவிகளும் போதவில்லை.

வேலையில்லாமல் வேற்று ஊரில் இருந்த தொழிலாளர்கள் சோர்வடைந்தனர். எதிர்காலம் என்னாகுமோ, நோய்த்தொற்று ஏற்பட்டால் நிலைமை என்ன ஆகும் என்ற உயிரச்சமும் சேர்ந்துகொண்டது. அரசு முழு அடைப்பை அறிவித்ததுடன் ராணுவம், போலீஸைக் கொண்டு அமல்படுத்தியது. வெளியூருக்குச் செல்ல முடியாதபடி பொதுப் போக்குவரத்து முடங்கியது. சாலைகளிலும் முள்கம்பி வேலிகளைப் போட்டு தடை செய்துவிட்டனர். காவலும் கண்காணிப்பும் 24 மணி நேரமும் தொடர்ந்தது.

சோர்ந்துபோன மருத்துவத் துறை

நோய்த்தொற்று இருக்கிறதா என்ற சோதனை ஒரு பக்கம் நடந்தது. நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கிடைக்கவும் தாமதமாயின. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. நகர மருத்துவர்களும் செவிலியர்களும் அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சோதனை, சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு சோர்ந்துவிட்டனர். மருத்துவர்கள் வழக்கத்துக்கு மாறாகத் தொடர்ந்து வேலை செய்ய நேர்ந்ததால், தூக்கமின்மை நோய்க்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளானார்கள். செவிலியர்களும் உடல், உள்ளம் சோர்ந்தார்கள். பிற நகரங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் மருத்துவர்களும் செவிலியர்களும் வந்தாலும் லட்சக்கணக்கானவர்களைச் சோதிக்கவும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை செய்யவும் போதவில்லை.

ஒரு கட்டத்தில், நோய் அறிகுறி இருந்தவர்கள்கூட வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கடைகள் மூடப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் விலையுயர்வும் தொடர்ந்தது. தடுப்பு ஊசிகளை வெளிநாடுகளிலிருந்து வரவழைக்க வேண்டியிருந்ததால் அதற்காகும் செலவும் மக்களிடமே வசூலிக்கப்பட்டது.

ஹோ சி மின் நகரில் உள்ள அனைவருக்கும் ஒரு நாளைக்கு 11,000 டன் உணவு தேவைப்பட்டது. ஆனால், அதில் சிறு பகுதியைக்கூட அரசால் தர முடியவில்லை. தனியார் உணவு விடுதிகளும் ஹோட்டல்களும் மூடப்பட்டதால் வெளியூர்க்காரர்கள் மட்டுமல்லாது, சொந்த வீடுகளில் வசித்தவர்கள்கூட வாங்கிச் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது.

கலங்கவைத்த காட்சிகள்

கடந்த ஜூனில் மீண்டும் தொடங்கிய ஊரடங்கு, ஆகஸ்ட் 23-க்குப் பிறகு முழு ஊரடங்கானது. அது, செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்திருந்தது. எனவே, அக்டோபர் 1-ம் தேதியன்று அதிகாலையிலிருந்தே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஹோசிமின் நகரைவிட்டு தங்களுடைய சொந்த ஊர்களுக்கும் மாவட்டங்களுக்கும் செல்ல பைக்குகளில் குடும்பத்துடன் அணிவகுத்தனர். “இப்படி ஒரேயடியாக போகக் கூடாது, முதலில் நீங்கள் தடுப்பூசி போட்டாக வேண்டும், இல்லையென்றால் உங்கள் ஊர்களுக்கும் பரவிவிடும்” என்று ராணுவத்தினரும், போலீஸாரும் தடுத்தனர். ஆனால், “இங்கே வேலையில்லை, சாப்பிட உணவில்லை, குழந்தைகளுக்குப் பால் இல்லை, ஏற்கெனவே கடன் அதிகமாகிவிட்டது. வாடகை தர முடியாமல் வீட்டு உரிமையாளர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கிறது, எந்தக் காரணத்துக்காக இங்கே இருக்கச் சொல்கிறீர்கள்?” என்று குமுறிய தொழிலாளர்கள், இங்கே கடனில், பசியில் சாவதைவிட சொந்த ஊருக்குப் போனால் நோய் வந்தாவது செத்துப்போகிறோம் என்று மன்றாடினர்.

இதனால், மனம் இரங்கிய காவலர்கள் அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப இசைந்தனர். அவர்களின் பெயர்களைப் பதிவுசெய்ததுடன் தொலைபேசி எண்களை வாங்கிக்கொண்டனர். ஊருக்குப் போனதும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் சொல்லி அனுப்பினர். அதனால், கடந்த 4 நாட்களாக கிடைத்த வாகனங்களில், பெரும்பாலும் பைக்குகளில்தான் தொழிலாளர்கள் நகரைவிட்டு போய்க்கொண்டே இருக்கின்றனர். காத்திருக்கும் நேரத்தில் வீதியோரத்தில் குழந்தைகளைக் கிடத்திப் படுக்க வைத்திருக்கும் காட்சிகள் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருக்கின்றன. மக்களுக்கு எந்த வகையிலும் கணிசமாக உதவ முடியாத அரசும் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. மழைக் காலமாக இருப்பதால், ஆங்காங்கே அதிகாரிகள் பைக்கில் செல்வோருக்கு மழைக் கோட்டு தருகிறார்கள். அவர்களால் செய்ய முடிந்த உதவி அவ்வளவுதான்!

வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் வந்து வெளியேறுவதைத் தடுக்க முயன்ற அரசு, அடுத்த நாள் 113 பேருந்துகளைத் தந்து அதன் மூலம் 8,000 பேர் தொலைதூரம் செல்ல அனுமதித்தது.

தடுப்பூசிக்குக் கட்டணம்

ஊர்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அனைத்தும் தனிமைப்படுத்துதல் முகாம்களாக மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் அன்றாடம் அங்கே தங்கி உணவு, மருந்து எடுத்துக்கொள்ள ஒரு நாளைக்கு 80,000 டாங்குகள் (Dong) செலவாகின்றது. அமெரிக்க டாலர் கணக்கில் 3.5. பிசிஆர் சோதனைக்கு 30 டாலர் (7 லட்சம் டாங்குகள்) தேவைப்படுகிறது. நாட்டு மக்களில் 9.9 சதவீதத்தினர்தான் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். தலைநகரான ஹனோயில் 11 சதவீதம் பேர் ஊசி போட்டுள்ளனர். வியட்நாம் அரசாங்கமே பெரு நகரங்களிலும் சிறு நகரங்களிலும்தான் தடுப்பூசி போடுகிறது. கிராமங்களில் இது வேகம் பிடிக்கவில்லை.

அரசிடம் போதிய நிதி வசதி இல்லை, எனவே தடுப்பூசிக்கும் முகாம்களில் தங்க வைக்கவும் எல்லோரிடமும் பணம் வசூலிக்கிறது. தடுப்பூசியும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றது. உற்பத்தி, வேலைவாய்ப்பு, விநியோகம் முழுதாக நின்றுவிட்டதால் பொருளாதாரமும் மிகவும் பாதிப்படைந்திருக்கிறது. இதுவே, மிகப் பெரிய பிரச்சினையாகியிருக்கிறது. இதிலிருந்து வியட்நாம் எப்படி மீளப்போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!

Related Stories

No stories found.