அமெரிக்கா - ரஷ்யா இடையிலான ‘ஹாலிவுட்’ காட்சிகள் முடிவுக்கு வந்தன

அபுதாபியில் அரங்கேறியது கைதிகள் பரிமாற்றம்
அமெரிக்கா - ரஷ்யா இடையிலான ‘ஹாலிவுட்’ காட்சிகள் முடிவுக்கு வந்தன

உக்ரைன் போர் மத்தியில் அமெரிக்கா - ரஷ்யா இடையே 9 மாதங்களாக நீடித்த, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான கைதிகள் பரிமாற்ற ஏற்பாடு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற பிரிட்னி க்ரைனர் என்ற கூடைப்பந்து வீராங்கனை கைது செய்யப்பட்டார். ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை வஸ்துவை அவர் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 2 ஒலிம்பிக் தங்கங்கள் உட்பட ஏராளமான சர்வதேச பதக்கங்களை வென்றவர் க்ரைனர். அவரது ரஷ்ய கைதுக்கு எதிராக அமெரிக்க தேசமே பொங்கியது.

அப்போதுதான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியிருந்தது. அதனை கண்டிக்கும் வகையில் ரஷ்யா மீதும் அதிபர் புதினுக்கு எதிராகவும் பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா பாய்ச்சி இருந்தது. இந்த சூழலில் ரஷ்யாவுக்கான துருப்பு சீட்டாக பிரிட்னி க்ரைனரின் கைது அமைந்தது. க்ரைனரை மீட்க அமெரிக்கா தொடங்கிய ராஜீய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

பிரிட்னி க்ரைனர்
பிரிட்னி க்ரைனர்

ரஷ்ய நீதிமன்றத்தில் க்ரைனருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுவாக அமைந்தன. மருத்துவ பரிந்துரையின் பேரிலான கஞ்சா எண்ணெயை வலி நிவாரணியாக உபயோகித்ததாக விளக்கமளித்த க்ரைனர், கடைசியில் ரஷ்ய மண்ணில் தான் செய்தது குற்றம் என்று ஒப்புக்கொண்டார். அங்கே அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தீர்ப்பானது. இதற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்றன. அதிபர் பைடன் நேரடியாக இந்த விவகாரத்தில் இறங்கினார். கடைசியில் கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் க்ரைனரை மீட்க முடிவானது.

அதன்படி அமெரிக்கா கோரும் க்ரைனரை ரஷ்யா விடுவிக்கும். பதிலுக்கு ரஷ்யா கோரும் அமெரிக்க கைதி அங்கிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அப்படி ரஷ்யா கோரிய கைதி, அமெரிக்க அரசை விதிர்க்க வைத்தது. விக்டர் பௌட் என்ற ரஷ்ய ஆயுத வியாபாரி, உலகமெங்கும் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சி குழுக்களுக்கு சட்ட விரோதமாக ஆயுதம் விற்று வந்தார். ’சாவு வியாபாரி’ என்பது விக்டரின் செல்லப்பெயர். உலகின் பெரியண்ணனான அமெரிக்கா, 2008-இல் விக்டரை தாய்லாந்தில் பொறி வைத்து பிடித்தது. பின்னர் அமெரிக்காவுக்கு எதிரான ஆயுத பேரங்களில் ஈடுபட்ட குற்றங்களின் கீழ் அமெரிக்க நீதிமன்றம் 2012-இல் விக்டருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

விக்டர் பௌட்
விக்டர் பௌட்

இந்த விக்டரை கோரி ரஷ்யா நெருக்கியது. ரஷ்யாவின் நிபந்தனைக்கு இணங்கிப் போவதை தவிர அமெரிக்காவுக்கு வேறுவழியில்லை. அந்த வகையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இடையே தொடர்ந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது, அபுதாபி விமான நிலையத்தில் வைத்து ரஷ்யா - அமெரிக்கா இடையிலான கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. அதன்படி ரஷ்ய சிறையிலிருந்து அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி க்ரைனர் மற்றும் அமெரிக்க சிறையிலிருந்த ரஷ்ய ஆயுத வியாபாரி விக்டர் பௌட் ஆகியோர் இரு நாடுகள் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்டனர்.

’சாவு வியாபாரி’ விக்டர் பௌட்டை மையமாக வைத்து ஏராளமான நாவல்கள், டிவி தொடர்கள் வெளியாகி இருக்கின்றன. நிகோலஸ் கேஜ் நடிப்பில் வெளியான ’லார்ட் ஆஃப் வார்’(2015) உட்பட ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. தற்போது அந்த ஹாலிவுட் காட்சிகளை மிஞ்சும் வகையில், அமெரிக்கா - ரஷ்யா இடையிலான கைதிகள் பரிமாற்றமும், அதற்கான பல கட்ட முன்னெடுப்புகளும் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in