‘இல்லை, இல்லவே இல்லை’ - இம்ரான் புகாரை மீண்டும் மறுத்த அமெரிக்கா!

‘இல்லை, இல்லவே இல்லை’ - இம்ரான் புகாரை மீண்டும் மறுத்த அமெரிக்கா!

தனது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகளுக்கு உதவியதாக அமெரிக்கா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார்.

மார்ச் 8-ல், பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய அவையில் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைமையிலான இம்ரான் கான் அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும் கடும் பணவீக்கத்துக்கும் அவரது அரசின் தவறான கொள்கைகள்தான் காரணம் என அக்கட்சிகள் குற்றம்சாட்டின.

சில நாட்களுக்குப் பின்னர், அவசரக் கூட்டம் ஒன்றுக்கு இம்ரான் அழைப்பு விடுத்த இம்ரான் கான், 'மார்ச் 8 அல்லது அதற்கு முந்தைய நாள் அமெரிக்காவிடமிருந்து அரசுக்கு வந்த மிரட்டல் கடிதம் எனக் கூறி அமைச்சர்களிடம் ஒரு கடிதத்தைக் காட்டினார். பின்னர். சுதாரித்துக்கொண்டவராக, “இல்லை அமெரிக்கா அல்ல. வேறு ஒரு நாடு” என்றார். அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு வெளிநாட்டு ஆதரவு தெரிவிப்பதாகக் குற்றம்சாட்டினார். வெளியுறவுக் கொள்கையில், சுதந்திரமான தனது நிலைப்பாட்டின் காரணமாக இந்தச் சதி நடப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தகவல் வெளியானதும், பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் ‘டான்’ (Dawn ) நாளிதழ், இம்ரானின் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையிடமே விளக்கம் கேட்டது. அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கமளித்திருந்தது.

பின்னர், வெளிப்படையாகவே இம்ரான் கான் அமெரிக்காவைக் குற்றம்சாட்டினார். அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டொனால்டு லு தான் இந்தச் சதிக்குப் பின்னால் இருக்கிறார் என்று கூறினார். “இம்ரான் கானின் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை” எனத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ், “பாகிஸ்தானின் அரசமைப்புச் சட்ட இயங்குமுறையையும், சட்டவிதிகளையும் மதிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இம்ரான் கானின் குற்றச்சாட்டை மூன்றாவது முறையாக மறுத்திருக்கிறது அமெரிக்கா. நேற்று (ஏப்.8) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர், “மிகத் தெளிவாகச் சொல்கிறேன், இந்தக் குற்றச்சாட்டுகளில் கொஞ்சம் கூட உண்மை இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா மீதான இம்ரான் கானின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவமும் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in