அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை இந்தியாவையும் பாதிக்குமா? - ஓர் அலசல்

அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை இந்தியாவையும் பாதிக்குமா? - ஓர் அலசல்

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் மந்தநிலையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும் இடைக்காலத்தில் மட்டுப்படும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். நுகர்வு, முதலீடு, தொழில் துறை போன்றவற்றில் இந்தியாவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் பெருந்தொற்றுக்கு முன்பிருந்த வீதத்தை எட்டும் வேகத்தில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

சேவைத் துறையில் மட்டும், பெருந்தொற்றுக்கு முன்பிருந்த அளவைவிட 4 சதவீதப் புள்ளிகள் அளவுக்கு வளர்ச்சி பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அதுவும் இப்போது உயர்ந்திருக்கிறது. எனவே அடுத்த காலாண்டுப் பருவத்தில் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை தொடர்ச்சியாக நீடிக்க வாய்ப்பிருப்பதால், அதன் சார்பு விளைவாக இந்தியாவிலும் வளர்ச்சியில் தொய்வு ஏற்படக்கூடும்.

அமெரிக்காவில் அதன் 2022 நிதியாண்டின் கடைசி காலாண்டில் மந்தநிலை வெளிப்படையாகத் தெரியும். நுகர்வோர் தங்களுடைய முதலீடுகள் குறித்து அச்சப்படுவார்கள். எரிபொருள் பற்றாக்குறையும் விலையுயர்வும் அனைவரையும் பாதிக்கும். உலக அளவிலும் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார வளர்ச்சி வீதம் குறையும். இந்தியாவில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும்தான் அரசின் இலக்கையும் மிஞ்சிய அளவில் விலைவாசி உயர்வு (பணவீக்க விகிதம்) இருக்கிறது.

அமெரிக்கா ஏன் முக்கியம்?

இந்தியாவின் வாணிப ஏற்றுமதிகளில் 18 சதவீதம் அமெரிக்காவில்தான் வாங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதிச் சந்தையும் 60 சதவீதம் அளவுக்கு அமெரிக்காவைத்தான் நம்பியிருக்கிறது. இந்தக் காரணங்களால்தான் இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் வாய்ந்த நாடாகத் திகழ்கிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்தால் இந்தியாவின் ஏற்றுமதியும் குறையும்; இந்தியாவில் அந்நிய முதலீடும் மேலும் சரியும்.

விலைவாசி உயர்ந்துகொண்டே போனால் மக்கள் அவசியப் பொருட்களைக்கூட குறைத்துத்தான் வாங்குவார்கள் அல்லது வாங்க முடியாமல் தவிப்பார்கள். நிதித் துறையில் கடும் நெருக்கடிகள் ஏற்படும். பணவோட்டம் குறையும். மக்கள் தங்களுடைய தேவைகளுக்குக் கடன் வாங்கப் போனால், அதிக வட்டி தர வேண்டியிருக்கும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2022-ல் 7.2 சதவீதமாகவும் 2023-ல் 5.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த 5.4 சதவீதம் கூட வேறு காரணங்களால் மேலும் குறையவே வாய்ப்புகள் அதிகம்.

அமெரிக்க நிலவரம்

அமெரிக்காவில் பண்டங்களுக்கான சந்தை, பங்குச் சந்தை அனைத்துமே சரிந்து வருகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தநிலை நோக்கிப் போகிறதா அல்லது போயேவிட்டதா என்று பொருளாதார வல்லுநர்களே குழம்புகிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, இதுவரை இருந்திராத வகையில் வட்டி வீதத்தை பெரிய நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தின. அமெரிக்காவின் பெடரல் வங்கியும் இதில் விதிவிலக்கல்ல. இதனாலேயே அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி தொடர்ந்து உயர்ந்துவிடக் கூடாது என்று எல்லா நாடுகளின் மத்திய வங்கிகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கச்சா பெட்ரோல்-டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வும், கோதுமை – அரிசி – பருப்புகள், சமையல் எண்ணெய், உரங்கள் ஆகியவற்றின் விலையுயர்வும்தான் பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணங்கள். இவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் விலையை அரசு கட்டுப்படுத்தினால் விலையுயர்வு மிதமாகும்.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் உற்பத்தி, வேலைவாய்ப்பு, வருவாய் என்று அனைத்துமே தொடர் விளைவாகக் குறையும். அதனால் சில வேளைகளில் வாங்குவதற்கு அதிகம் பேர் இல்லை என்பதால் விலைவாசி குறையவும் வாய்ப்புகள் உண்டு.

தொடரும் ஏழ்மை

பெருந்தொற்றுக் காலமாக இருந்தாலும் பொருளாதார மந்தநிலையாக இருந்தாலும் பெருந்தொழில் நிறுவனங்களும் ஏகபோக முதலாளிகளும் தங்களுடைய லாபத்தைக் குறைத்துக்கொள்வதில்லை. இதனாலும் ஏழைகள் மேலும் ஏழைகளாவதே நடக்கிறது. எல்லா நாடுகளிலும் தொழிலதிபர்கள், பணக்காரர்களுக்கே பெரும்பாலான அரசியல்வாதிகள் ஆதரவாக இருப்பதால் அவர்கள் லாபம் சம்பாதித்துக் கொழுப்பதைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதே இல்லை.

மக்களுடைய வாங்கும் சக்தி குறைந்து, சரக்குகளைத் தேடி அலையும் கூட்டம் வற்றினால்தான் விலைவாசி குறையும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். நுகர்பொருட்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம், அத்தியாவசியப் பொருட்களின் நுகர்வை மக்களால் ஒத்திப்போடவே முடியாது. ஆட்சியாளர்களால்தான் இந்த உண்மையை உணர முடிவதேயில்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in