இந்தியா வரும் தலீப் சிங்: என்னென்ன வியூகங்கள் வகுக்கப்படுகின்றன?

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பதில் அமெரிக்க அரசுக்கு ஆலோசனை வழங்குபவர் தலீப் சிங்
தலீப் சிங்
தலீப் சிங்

உக்ரைன் போரை முன்வைத்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் முக்கியப் பங்காற்றிவரும் அமெரிக்கவாழ் இந்தியரான தலீப் சிங் இன்று (மார்ச் 30) இந்தியா வருகிறார். இன்றும் நாளையும் இந்தியாவில் பல கூட்டங்களில் அவர் கலந்துகொள்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற முதல் ஆசியரான தலீப் சிங் சவுந்தின் பேரனான தலீப் சிங், மாசச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ஹார்வர்டு கென்னடி பள்ளி ஆகியவற்றில் முதுநிலை வணிக நிர்வாகம் மற்றும் சர்வதேச பொருளாதாரம் தொடர்பான பொது நிர்வாகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். ஒபாமா ஆட்சிக்காலத்தில், சர்வதேச விவகாரங்களுக்கான கருவூலத்தின் உதவிச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.

தற்போது, அமெரிக்க அரசில், சர்வதேசப் பொருளாதாரத்துக்கான தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக அவர் பதவி வகிக்கிறார். உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் அதிபர் ஜோ பைடனின் அரசுக்கு முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்குகிறார்.

உக்ரைன் மீது நியாயமற்ற வகையில் ரஷ்யா தொடுத்திருக்கும் போரின் காரணமாக ஏற்பட்டிருக்கும் விளைவுகள், உலகப் பொருளாதாரத்தின் மீது அவை ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் விவாதிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவரது இந்தியப் பயணம் அதை ஒட்டியே நிகழ்கிறது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான பொருளாதாரத் தொடர்புகள், வியூக அடிப்படையிலான கூட்டு ஆகியவை தொடர்பாக இந்திய உயரதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான பொருளாதார வளர்ச்சி குறித்தும் இந்திய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார்.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் இந்தியா வருவதற்கு முன்னதாக தலீப் சிங்கின் வருகை நிகழ்வது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in