‘இது சுதந்திரம் அல்ல... பயங்கரவாதம்’ - அமெரிக்க சுதந்திர தினத்தில் சிகாகோ துப்பாக்கிச்சூடு ஏற்படுத்திய அதிர்வுகள்

‘இது சுதந்திரம் அல்ல... பயங்கரவாதம்’ - அமெரிக்க சுதந்திர தினத்தில் சிகாகோ துப்பாக்கிச்சூடு ஏற்படுத்திய அதிர்வுகள்

தொடர்ந்து நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் அதிர்ந்து போயிருக்கிறது அமெரிக்கா. பள்ளிகள், வணிக வளாகங்கள் எனப் பொது இடங்களில் நடந்தேறும் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஏராளமானோர் பலியாகியிருக்கிறார்கள்.

மே 14-ல் நியூயார்க்கின் பஃபலோ பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கறுப்பின மக்கள் குறிவைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட இனவெறித் தாக்குதல் சம்பவம் நடந்தது. மே 24-ல் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழலில் அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4-ல் (திங்கள்கிழமை) நடந்த கொடி அணிவகுப்பு கொண்டாட்டம் அந்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது. அந்த வகையில் இல்லினாய் மாநிலத்தின் சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதியான ஹைலேண்ட் பார்க்கில் நேற்று நடந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட மக்கள் மீது, அருகில் இருந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராபர்ட் கிரிமோ எனும் 22 வயது வெள்ளையின இளைஞரை போலீஸார் பிடித்துவிசாரித்துவருகின்றனர். அவரை ‘பெர்சன் ஆஃப் இன்டெரஸ்ட்’ எனும் அடிப்படையில் பிடித்து வைத்திருக்கின்றனர். குற்றத்தில் ஈடுபட்டிருப்பார் எனும் அனுமானத்தில் போலீஸாரால் பிடித்து விசாரிக்கப்படும் நபர் / ‘பெர்சன் ஆஃப் இன்டெரஸ்ட்’ என அழைக்கப்படுகிறார். இந்த அடிப்படையில் பிடிக்கப்படும் நபர் கைதுசெய்யப்பட்டிருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராபர்ட் கிரிமோ விரைவில் கைதுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராபர்ட் கிரிமோ
ராபர்ட் கிரிமோ

தொடரும் துயரங்கள்

ஓரிருவர் உயிரிழக்கும் சம்பவங்கள் அமெரிக்காவுக்கு வெளியே அதிகம் பேசப்படுவதில்லை. அதிக அளவில் மரணங்கள் நிகழும்போதுதான் அது பேருபொருளாகிறது. 2022-ல் மட்டும், இதுவரை மொத்தம் 309 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இப்படியான சம்பவங்கள் தொடர்வதால், துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவது எப்போது எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் இன்னமும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இந்தச் சூழலில், ஜனநாயகக் கட்சியினர் நியூயார்க் சட்டப்பேரவையில் கொண்டுவந்திருக்கும் மசோதா, துப்பாக்கி உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட குணாதியசங்கள் குறித்தும் தகவல்கள் அளிக்க வேண்டும் எனக் கோருகிறது. தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் வெளியிட்ட பதிவுகளும் கோரப்படுகின்றன. துப்பாக்கியை வைத்துக்கொள்ள உரிமம் கோரும் தனிநபர்கள், தங்களுக்கும் பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள மாட்டார்கள் என்பதை உறுதிசெய்ய இந்த மசோதா உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிகாகோ துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்கர்களை மனதளவில் மிகவும் பாதித்திருக்கிறது. சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது தார்மிக ரீதியில் இதுவரை தாங்கள் பெற்றிருக்கும் அடிப்படை உரிமைகளையே கேள்விக்குட்படுத்துவதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

சிகாகோ துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகப் பேசிய ஹைலேண்ட் பார்க் நகர மேயர் நான்ஸி ரோட்டரிங், “ஜுலை 4-ம் தேதி காலை 10.14 மணிக்கு அமெரிக்கச் சமூகம், ஒரு வன்முறைச் சம்பவத்தால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டது. அது நம்மை முற்றிலும் உலுக்கிவிட்டது. சுதந்திர தினத்தைக் கொண்டாட கூடியிருந்த நாம் அதற்குப் பதிலாக துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம்” என வேதனை தெரிவித்திருக்கிறார்.

துப்பாக்கிக் கட்டுப்பாடு தொடர்பாகத் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் ‘கிஃபோர்ட்ஸ் கரேஜ்’ எனும் அமைப்பு, ‘ஜூலை 4-ல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது ஏராளமானோர் உயிருக்குப் பயந்து ஓட வேண்டியிருந்தது பலர் மரணமடைந்தனர். பலருக்குக் காயம் ஏற்பட்டது. இது சாதாரண விஷயம் அல்ல. துப்பாக்கியால் சுடப்படுவோம் எனும் அச்சத்திலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறது. இந்த அமைப்பைத் தொடங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேபி கிஃபோர்ட்ஸ், 2011 அரிசோனா மாநிலத்தின் டக்ஸனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்.

துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்துப் பேசிவரும் மாம்’ஸ் டிமாண்ட் எனும் குழுவின் நிறுவனரான ஷேனான் வாட்ஸ், “வெள்ளையினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ‘ஸ்னைப்பர்’ (குறிபார்த்துச் சுடும் துப்பாக்கி வீரர்) போல மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு, கீழே சென்றுகொண்டிருந்த மக்கள் மீது குறிபார்த்து சுட்டிருக்கிறார். இது சுதந்திரம் அல்ல... இது பயங்கரவாதம்” எனக் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in