போர் விமானங்களைத் தர முன்வந்த போலந்து: ஆட்சேபித்த அமெரிக்கா!

உக்ரைன் போரின் தற்போதைய நிலவரம்
போர் விமானங்களைத் தர முன்வந்த போலந்து: ஆட்சேபித்த அமெரிக்கா!

உக்ரைனுக்கு மிக்-29 போர் விமானங்களை இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாகப் போலந்து தெரிவித்த நிலையில், அந்த யோசனையை மறுதலித்திருக்கிறது அமெரிக்கா.

ரஷ்யப் படைகளின் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் உக்ரைனிலிருந்து இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். அதில் போலந்தில் மட்டும் இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும் மேற்கொண்டுவருகிறது போலந்து. கூடவே, தங்களிடம் இருக்கும் மிக்-29 ரக ஜெட் விமானங்கள் அனைத்தையும் உடனடியாக இலவசமாக போலந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்பிக்நியூ ரவு, நேற்று அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, கீவ், செர்னிஹிவ், சுமி, கார்கிவ், மரியுபோல் நகரங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற, மனிதாபிமான அடிப்படையிலான வழித்தடத்துக்கு வழிவகுக்கும் வகையில் புதன் கிழமை (மார்ச் 9) காலை 7 மணி முதல் சண்டை நிறுத்தம் செய்யப்படும் என ரஷ்யாவின் தேசியக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகையீல் மிஸின்ட்ஸேவ் கூறியிருந்தார். இதைச் சுட்டிக்காட்டி போலந்தின் இந்த யோசனையை அமெரிக்கா நிராகரித்திருக்கிறது.

சோவியத் ஒன்றிய காலத்து விமானங்கள்

போலந்திடம் சோவியத் ஒன்றிய காலத்தில் தயாரிக்கப்பட்ட மிக்-29 ரக போர் விமானங்கள் 28 இருப்பதாகக் கருதப்படுகிறது. அவற்றை உக்ரைனுக்குக் கொடுத்துவிட்டு, அமெரிக்காவிடமிருந்து புதிய போர் விமானங்களை வாங்கிக்கொள்ள விரும்புவதாக ஸ்பிக்நியூ ரவு கூறியிருந்தார்.

இந்த ஏற்பாட்டின் மூலம் ரஷ்யாவின் நேரடியான கோபத்துக்கு ஆளாகாமல் தவிர்க்க முடியும் என்றும் போலந்து கருதுகிறது. ஆனால் இது குறித்து போலந்து தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.

உக்ரைன் விமானங்களைத் தங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதிக்கும் நாடுகள், இந்தப் போரில் பங்கேற்பவையாகவே கருதப்படும் என்று ரஷ்யா ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

வாக்கு தவறும் ரஷ்யா

சண்டை நிறுத்தம் எனச் சொல்லிவிட்டு மக்கள் வெளியேற விடாமல் மீண்டும் குண்டுவீசித் தாக்குகிறது ரஷ்யா. வோல்னாகாவா, மரியுபோல் நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற சண்டை நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்த ரஷ்யப் படைகள், மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்ததால் மக்கள் வெளியேறுவது தடைபட்டது. அதேபோல, நேற்றும் மரியுபோல் நகரிலிருந்து மக்கள் வெளியேற முடியாத வகையில் ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தி, தனது வாக்கை மீண்டும் மீறியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in