அமெரிக்காவிலும் பரவிய குரங்கு அம்மை: ஆபத்தான நோயா?

அமெரிக்காவிலும் பரவிய குரங்கு அம்மை: ஆபத்தான நோயா?

கடந்த சில நாட்களாக ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் குரங்கு அம்மை (monkeypox) எனும் நோய் பரவிவருவது புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நைஜீரியாவிலிருந்து பிரிட்டனுக்குச் சென்ற ஒருவருக்கு, மே 6-ம் தேதி முதன்முதலாகக் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அங்கு பலருக்கு அந்த நோய் பரவியது. பிரிட்டனில் இதுவரை 9 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பின்னர் ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா ஆகிய நாடுகளிலும் இந்நோய் பரவியது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் 40-க்கும் மேற்பட்டோருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. கனடாவில் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மசாசூசெட்ஸ் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. அத்துடன், குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நபரால் பொதுமக்களின் சுகாதாரத்துக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் மக்களில் சிலர் குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளாவது வழக்கம். எனினும், ஐரோப்பா, வட அமெரிக்காவில் இந்தத் தொற்று ஏற்படுவது அரிது. தன்பாலின உறவு பழக்கம் கொண்ட ஆண்கள் மத்தியில் இந்தப் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானவர்களுக்குக் காய்ச்சல், தசை வலி, நிணநீர் கணுக்களில் வீக்கம், சின்னம்மை பாதிப்பின்போது ஏற்படுவது போல முகத்திலும் உடலிலும் தடிப்புகள் ஏற்படுவது ஆகிய அறிகுறிகள் தோன்றும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்திருக்கிறது. தொற்றுக்குள்ளானவர்களுக்கு 2 முதல் 4 வாரங்கள் வரை பாதிப்பு தொடரும் என்றாலும் உயிரிழப்புகள் ஏற்படுவது அரிது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in