
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இமெயில் சேவைகளில் ஒன்றான ஜிமெயில், சனியன்று திடீரென முடங்கியது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்த சிக்கல் நீடித்தது. காலையில் தொடங்கிய சிக்கல் மாலைக்கு பின்னர் படிப்படியாக சரியானது. ஜிமெயில் முடக்கம் தொடர்பாக கூகுள் பொறியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
உலகளில் சுமார் 150 கோடி பயனர்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். டெஸ்க்டாப் சேவையாக மட்டுமன்றி மொபைல் செயலி வாயிலாகவும் ஜிமெயில் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது. 2022-ஆம் ஆண்டில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஜிமெயில் முதன்மை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று(டிச.10) காலையில் ஜிமெயில் சேவை தொடர்பான புகார்கள் அடையாளம் காணப்பட்டன. மெயில் அனுப்புவது மற்றும் பெறுவதில் பெறும் சிக்கல்கள் நீடித்தன. ஜிமெயில் முடங்கியது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லாததில், பயனர்கள் தங்கள் தரப்பில் தவறு இருக்குமோ என்று அலைபாய்ந்தனர். சமூக ஊடகங்கள் வாயிலாக ஜிமெயில் முடக்கம் குறித்த தகவல் உறுதியான பிறகே ஆசுவாசம் அடைந்தார்கள்.
சனிக்கிழமை என்பதால் ஓரளவு அலுவலக பயன்பாடுகள் குறைந்திருப்பினும் பாதிப்புகள் பரவலாகவே இருந்தது. இது போன்ற இணையவெளி திணறல்களை ஆராயும் டவுன்டிடெக்டர்.காம் தளத்துக்கும் பயனர்கள் படையெடுத்தனர். டவுன்டிடெக்டரும் ஜிமெயில் முடங்கிப் போயிருந்ததை உறுதி செய்தது.
வெகு தாமதமாகவே பதில் வினையாற்றிய கூகுள் நிறுவனம், ’அமெரிக்க - பசிபிக் பிராந்தியத்தில் அறியப்பட்ட ஜிமெயில் முடக்கம் இதர நாடுகளிலும் தென்பட்டதாகவும், தற்போது பிரச்சினை சரிசெய்யப்பட்டு வருவதாகவும்’ தெளிவுபடுத்தினர். மேலும், ’ஜிமெயிலுக்கு நேர்ந்த பிரச்சினை குறித்து கூகுள் பொறியாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும்’ தெரிவித்துள்ளனர்.