காசா பகுதியில் நடந்துவரும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் உடனடியாக நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இஸ்ரேல் நாட்டின் பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து அந்த அமைப்பின் மீதான போரை இஸ்ரேல் தொடங்கி நடத்தி வருகிறது. இதில் காசா நகரம் பெரும் அழிவுக்கு உள்ளாகி வருகிறது.
இங்கு மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவிர்த்து வருகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால் அங்கு நடைபெறும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் குரல் எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் காசா பகுதியில் மனிதநேய அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டி ஐ.நா., பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நான்கு முறை தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அந்த தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையில் ஐந்தாவது முறையாக இந்த விவகாரம் தொடர்பாக, அங்கு உனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா பொது சபையில் ஜோர்டான் வரைவு தீர்மானம் தாக்கல் செய்தது.
எதிர்வரும் ரமலான் பண்டிகையை கருத்தில் கொண்டு 'காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்' என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் அந்த தீர்மானம் நிறைவேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . ஆனால், அமெரிக்கா இந்த தீர்மானத்துக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வாக்களிக்காமல் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
பெரும் அழிவின் விளிம்பில் இருக்கும் காசா நகரில் தற்போது போர் நிறுத்தம் செய்யப்பட்டால் அது அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும், ஓரளவுக்கு அமைதி திரும்பவும் வழி வகுக்கும் என்று கருதப்படுகிறது.