‘சமுத்திரத்தை சாதாரணமாக எடைபோட்டுவிட்டோம்!’ - ஐநா பொதுச் செயலாளர் ஆதங்கம்

‘சமுத்திரத்தை சாதாரணமாக எடைபோட்டுவிட்டோம்!’ - ஐநா பொதுச் செயலாளர் ஆதங்கம்

பூமியின் பரப்பளவில் 70 சதவீதம் கடல் பகுதிதான். உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்குக் கடலிலிருந்து உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. உலகில், முறைப்படுத்தப்படாத மிகப் பெரிய பரப்பு கடல் பகுதிதான் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இத்தனை முக்கியத்துவம் கொண்ட கடலைப் பேணிக் காக்க ஒருங்கிணைந்த சட்டபூர்வ அமைப்புகள் இல்லை.

புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, கடலில் அமிலத்தன்மை கலப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளைப் பெருங்கடல்கள் எதிர்கொண்டிருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. கடலுக்கு அடியில் சுரங்கங்கள் அமைக்கும் பணிகள் தொடர்பான சட்டங்களும் வலுவாக இல்லை. அதேசமயம், இந்தப் பிரச்சினைகளைக் களைவதற்கான முயற்சிகளும் ஒருபுறம் நடந்தவண்ணம் உள்ளன.

அந்த வகையில், கடல் பகுதிகளைப் பாதுகாப்பது தொடர்பாக போர்ச்சுகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் இன்று ஐநா பெருங்கடல் மாநாடு தொடங்கியிருக்கிறது. ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச மாநாடு, உலகில் உள்ள பெருங்கடல்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தத்துக்கான நீடித்த முயற்சிகளுக்குப் புதிய உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் உயரதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருக்கின்றனர்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், பருவநிலைக்கான அமெரிக்கத் தூதரும் வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமன ஜான் கெர்ரி உள்ளிட்ட தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவிருக்கின்றனர். இதன் முந்தைய மாநாடு, 2018-ல் கென்யாவின் தலைநகரான நைரோபியில் நடந்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய மாநாட்டில் கலந்துகொண்டு தொடக்க உரையாறிய ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குத்தேரஸ், “கடல் தொடர்பான பிரச்சினைகளைக் களைய உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் கடலை சாதாரணமாகக் கருதிவிட்டோம். இன்றைக்கு ‘கடல் நெருக்கடி’ என்று அழைக்கும் அளவுக்குப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறோம். இந்நிலையை மாற்ற வேண்டும்” என்றார்.

ஜூலை 1-ல் முடிவடையவிருக்கும் இந்த மாநாட்டில், கடலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்கான வழிமுறைகளுக்கு வழிவகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இதன் இறுதித் தீர்மானம், இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இவ்விஷயத்தில் அழுத்தம் கொடுக்காது என்பது கவனிக்கத்தக்கது. கூடவே, ஆழ்கடலுக்கான ஒப்பந்தம் என அழைக்கப்படும் தேசிய அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட பல்லுயிர் தொடர்பான ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தாகவில்லை. ஐநா கடல் சட்ட சாசனத்தின் வரையறைகளுக்குட்பட்டு இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுவருகிறது. இது கடலில் மனிதர்களின் செயல்பாடுகள் குறித்த முக்கியமான சர்வதேச ஒப்பந்தம் எனக் கருதப்படுகிறது.

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. மூன்று மாதங்களுக்கு முன்னர் இதன் நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் மாதம் நியூயார்க் நகரில் நடக்கவிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in