‘போரிட மட்டுமல்ல... பாடவும் தெரியும்’ -  யூரோவிஷன் போட்டியில் வென்ற உக்ரைன் இசைக் குழு!

‘போரிட மட்டுமல்ல... பாடவும் தெரியும்’ - யூரோவிஷன் போட்டியில் வென்ற உக்ரைன் இசைக் குழு!

இத்தாலியின் டுரின் நகரில் நேற்று இரவு நடைபெற்ற 66-வது யூரோவிஷன் இசைப் போட்டியில் உக்ரைனின் கலுஷ் ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் ‘ஸ்டெஃபானியா’ பாடல் முதல் பரிசை வென்றிருக்கிறது. பிரிட்டன், ஸ்பெயின், ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த இசைக்குழுக்கள் கடும் போட்டியை ஏற்படுத்தியிருந்த நிலையில் உக்ரைன் இசைக் குழுவுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி அந்நாட்டினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

2003-ம் ஆண்டு முதல் யூரோவிஷன் போட்டியில் பங்கேற்றுவரும் உக்ரைன் இதற்கு முன்னர் இரண்டு முறை முதல் பரிசை வென்றிருக்கிறது. ரஷ்யா தொடுத்திருக்கும் போரால் நிலைகுலைந்திருக்கும் நிலையில் இப்போது அந்நாட்டு இசைக் குழுவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் போட்டியை ஒட்டி செல்போன் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் உக்ரைன் இசைக்குழுவுக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் பிரிட்டன் குழுவுக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து டெலிகிராம் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி. ‘எங்கள் துணிவு உலகத்துக்கு உத்வேகம் தருகிறது. எங்கள் இசை ஐரோப்பாவை வெல்கிறது! அடுத்த ஆண்டு யூரோவிஷன் நிகழ்ச்சியை உக்ரைன் நடத்தும். நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம்’ என்று அந்தப் பதிவில் கூறியிருக்கும் ஸெலன்ஸ்கி, தற்போது ரஷ்யாவின் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் மரியுபோல் நகரத்தில் இந்நிகழ்ச்சியை நடத்த அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். மரியுபோல் நகரை சுதந்திரமான, அமைதியான நகரமாக மறுகட்டமைக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்த உக்ரைன் ராணுவ வீரர்கள், ‘எங்களுக்குப் போரிட மட்டுமல்ல பாடவும் தெரியும் எனக் காட்டியிருக்கிறோம். எங்கள் இசைக் குழு வெற்றி பெற்றதைப் போல, இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம்’ எனத் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in