உக்ரைன் போர் உங்களையும் பாதிக்கலாம்: உலக வங்கியின் அறிக்கை என்ன சொல்கிறது?

உக்ரைன் போர் உங்களையும் பாதிக்கலாம்: உலக வங்கியின் அறிக்கை என்ன சொல்கிறது?

ரஷ்யா தொடுத்திருக்கும் போரால் நேரடி பாதிப்பை உக்ரைன் எதிர்கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச அளவில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் எனும் ஊகங்களும் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. அந்த வகையில் உலக வங்கி விடுத்திருக்கும் எச்சரிக்கை முக்கியமானது.

ஆம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு உணவு மற்றும் எரிசக்தி விலை கடுமையாக உயரும் என்று உலக வங்கி எச்சரித்திருக்கிறது. வளர்ச்சி குறையும் என்றும், 1970-களில் ஏற்பட்டதைப் போல கடுமையான பணவீக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

2024-ம் ஆண்டின் இறுதிவரை பொருட்களின் விலை அதிகரித்த்துக்கொண்டே செல்லும் என்றும், அதன் தொடர்ச்சியாக பெரும் தேக்க நிலை ஏற்படும் என்றும் உலக வங்கியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

1973-ல் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டுக்குப் பின்னர், கடந்த 2 ஆண்டுகளில் எரிபொருளின் விலை மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது என்று சுட்டிக்காட்டும் உலக வங்கியின் அறிக்கை, 2008-க்குப் பின்னர் உணவு மற்றும் உரங்களின் விலையும் பெருமளவில் உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது.

உக்ரைன் போர் காரணமாக உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஏற்பட்டிருக்கும் இடையூறுகளின் காரணமாக, இந்த ஆண்டில் எரிபொருளின் விலை 50 சதவீதம் அதிகரிக்கும் என்றும் உலக வங்கி கணித்திருக்கிறது. பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலர் என அதிகரிக்கலாம். இது 2013-க்குப் பிறகு மிக அதிகமான விலை உயர்வு. அது மட்டுமல்ல, கடந்த ஆண்டுடன் ஒப்பிட 40 சதவீதம் அதிகம். 2023-ல் அது 92 டாலராகக் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதுவே ஐந்தாண்டு சராசரி விலையான 60 டாலரைவிட மிக அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில் எரிவாயுவின் விலை, 2021-ல் இருந்ததைவிட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும், நிலக்கரியின் விலை 80 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கிறது இந்த அறிக்கை. மிக முக்கியமாக, கோதுமையின் விலை இந்த ஆண்டிலேயே 40 சதவீதம் அதிகரிக்கும். குறிப்பாக, ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளிடமிருந்தும் கோதுமை இறக்குமதி செய்யும் வளரும் நாடுகளுக்குக் கடும் நெருக்கடி உருவாகும்.

இது தொடர்பாகப் பேசியிருக்கும் உலக வங்கியின் துணைத் தலைவர் இண்டர்மிட் கில், “ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 1970-களில் இருந்ததைப் போல், அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம். உணவுப் பொருட்கள், எரிபொருள், உரம் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவது நிலைமையை இன்னும் மோசமாக்கும். நிலைமை இப்படியே தொடர்ந்தால், ஒட்டுமொத்தமாக தேக்கநிலை (stagflation) ஏற்படலாம். எனவே, அரசுகள் தத்தமது நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம், உலகப் பொருளாதாரத்துக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.