போருக்கு நடுவே உக்ரைனிலிருந்து புறப்பட்ட உணவுதானியக் கப்பல்!

உலகின் பட்டினி தவிர்க்க முக்கிய நடவடிக்கை
போருக்கு நடுவே உக்ரைனிலிருந்து புறப்பட்ட உணவுதானியக் கப்பல்!

ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய பின்னர் உக்ரைனிலிருந்து முதன்முறையாக உணவுதானியங்கள் அடங்கிய கப்பல் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. துருக்கி, ஐநா ஆகியவற்றின் முன்னெடுப்பால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இது சாத்தியமாகியிருக்கிறது. போரின் காரணமாக, உலகின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என அச்சம் எழுந்த நிலையில், இந்தத் தருணம் மிக மிக முக்கியமானது.

முடங்கிப்போன உணவுதானிய ஏற்றுமதி

உலகிலேயே அதிக அளவில் உணவு தானிய ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உக்ரைன் பிரதானமானது. கோதுமை ஏற்றுமதியில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் பங்களிப்பு மட்டும் 30 சதவீதம். கோதுமை, பார்லி, சூரியகாந்தி எண்ணெய் என அந்நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த உணவுப் பொருட்கள் தற்போது முடங்கியிருக்கின்றன. இதனால் பல்வேறு நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வது தடைபட்டது. இன்றைய தேதிக்கு 20 மில்லியன் டன் உணவு தானியம் உக்ரைனில் முடங்கிக்கிடக்கிறது.

அதுமட்டுமல்ல. உக்ரைனும் ரஷ்யாவும் சேர்ந்து உலகின் நைட்ரஜன் உரம் தயாரிப்பில் உலகில் 17 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத் தடை காரணமாக அந்நாடுகளின் உர உற்பத்தியும் ஏற்றுமதியும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. அது அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் தொடங்கி இந்தியா வரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் துறைமுகங்களை ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு முடக்கிவைத்திருப்பதால், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு குறைந்தது. இதனால் பல்வேறு நாடுகளில் உணவு தானியங்களின் விலை கணிசமாக உயர்ந்தது. நிலைமை இப்படியே தொடர்ந்தால் நிலவரம் மோசமாகலாம் என ஐநா அச்சம் தெரிவித்தது. உலகம் முழுவதும் 4.9 கோடி பேர் பட்டினி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள் எனும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இடைக்கால ஏற்பாடுகள்

இத்தனைப் பிரச்சினைகளுக்கு நடுவே தன்யூப் நதி வழியாகவும், ரயில்கள் மூலமாகவும் 4 மில்லியன் டன் உணவுதானியத்தை உக்ரைன் ஏற்றுமதி செய்துவிட்டது. எனினும், போருக்கு முன்பு இதைவிட இரண்டு மடங்கு உணவுதானியம் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த நிலையில், அந்த நிலையை மீண்டும் எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அதேசமயம், கப்பல்கள் மூலம்தான் அதிக அளவில் தானியங்களைக் கொண்டுசெல்ல முடியும் என்பதால், அதைச் சாத்தியமாக்கும் முயற்சிகளில் துருக்கியும் ஐநாவும் இறங்கின. ஐநாவின் கூட்டு ஒத்துழைப்பு மையம் துருக்கியுடன் இணைந்து இந்தப் பேச்சுவார்த்தைக்குத் துணை நின்றது.

பல வாரங்கள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஜூலை 22-ல் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. கப்பல்கள் புறப்பட்ட பின்னர் அவற்றையோ, துறைமுகங்களையோ ரஷ்யப் படைகள் தாக்கக்கூடாது என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், 24 மணி நேரத்துக்குள் ஒடெஸா துறைமுகத்தை ரஷ்யா தாக்கியது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை ரஷ்யாவிடம் விசாரணை நடத்தியது. அப்போது தாக்குதல் நடத்தியது நாங்கள் அல்ல என மறுத்த ரஷ்யா மறுநாளே, மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைச் சுமந்து சென்ற கப்பலையே தாக்கியதாக அறிவித்தது. ஆனால், ரஷ்யாவின் இந்த விளக்கத்தை உக்ரைன் கடுமையாக ஆட்சேபித்தது.

புதிய தொடக்கம்

இந்நிலையில், சியரா லியோன் கொடி பொருத்தப்பட்ட ‘ரஸோனி’ கப்பல் 26,000 டன் சோளத்தைச் சுமந்துகொண்டு ஒடெஸா துறைமுகத்திலிருந்து இன்று காலை லெபனானை நோக்கிப் புறப்பட்டது. இதையடுத்து, “உக்ரைன் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து உலகின் பட்டினியைத் தவிர்க்க முக்கிய நடவடிக்கையை இன்று எடுத்திருக்கிறது” என அந்நாட்டின் உட்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஒலெக்ஸாந்தர் குப்ரகோவ் தெரிவித்திருக்கிறார்.

துறைமுகங்களை மீண்டும் இயங்கச் செய்வதற்கான எல்லா முயற்சிகளிலும் உக்ரைன் அரசு இறங்கியிருப்பதாகக் கூறியிருக்கும் அவர், இதன் மூலம் அந்நியச் செலாவணி வருவாயாக 1 பில்லியன் டாலர் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 16 பெரிய கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் முடங்கிக் கிடக்கின்றன. வரும் வாரங்களில், இன்னும் அதிக தானியங்களை ஏற்றிச் செல்ல அந்தக் கப்பல்களைப் பயன்படுத்த உக்ரைன் அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். உக்ரைனிலிருந்து எந்தவித தடங்கல்களும் பிரச்சினைகளும் இல்லாமல் ஏற்றுமதி தொடரும் என துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவ்சோக்லு ட்வீட் செய்திருக்கிறார். மேலும் பல கப்பல்கள் உக்ரைனிலிருந்து கிளம்பும் என துருக்கி பாதுகாப்புத் துறையும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

இது மிகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று ரஷ்யாவும் கூறியிருக்கிறது. ஒருவேளை ‘சொல் ஒன்று செயல் ஒன்று’ என ரஷ்யாவின் இடையூறுகள் தொடர்ந்தால், நதிகள் வழியாகவும், ரயில்கள் மூலமும்தான் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய வேண்டியிருக்கும். பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in