உக்ரைன் - ரஷ்யா: ஒரு பக்கம் பேச்சுவார்த்தை... மறுபக்கம் யுத்தம்!

உக்ரைன் - ரஷ்யா: ஒரு பக்கம் பேச்சுவார்த்தை... மறுபக்கம் யுத்தம்!

பெலாரஸ் எல்லையில் உக்ரைன் - ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் போர் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரம் உக்ரைனுக்கு மிக முக்கியமானது என அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியது இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி 5-வது நாளில் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்யா கூறியிருந்தது. எனினும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த நாடு என்பதால் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் முன்வரவில்லை. இதையடுத்து, பெலாரஸ் எல்லையில் செர்னோபில் அணு உலை இருக்கும் பகுதிக்கு அருகே இந்தப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோயுடனான தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் வழங்கினார் ஸெலன்ஸ்கி. புதினின் இந்த மிரட்டலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

குறிப்பாக, அணு ஆயுதத் தடுப்புப் படையினர் முழுவீச்சில் தயாராக இருக்குமாறு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறிய நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஸெலன்ஸ்கி சம்மதித்தார்.

உக்ரைனிலிருந்து ரஷ்யப் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் வலியுறுத்தியிருக்கிறார். பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரீ பெஸ்கோவ், பேச்சுவார்த்தை நிலைப்பாடுகள் குறித்து எதையும் அறிவிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் போர் நடந்துகொண்டிருக்கிறது. உக்ரைனுக்குள் ஊடுருவிவிட்ட ரஷ்யப் படைகளை உக்ரைன் படையினரும் மக்களும் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கின்றனர். ரஷ்யப் படைகளுக்கான தளவாடங்கள், உணவுப்பொருட்கள் சென்று சேர்வதில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்கள் ரஷ்யாவை தார்மிக ரீதியாகப் பலமிழக்கச் செய்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. பொதுமக்களை உக்ரைன் படையினர் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருக்கிறது.

இந்தப் போரில் இதுவரை எத்தன பேர் உயிரிழந்தனர் என்பதில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. உக்ரைன் தரப்பில் 352 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடிழந்து அகதிகளாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் தரப்பில் மட்டும் 102 பேர் உயிரிழந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in