‘உலக மக்களே ஒன்றுகூடுங்கள்!’ - உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அழைப்பு

ரஷ்யத் தாக்குதல் தொடங்கி ஒரு மாதம் ஆகும் நிலையில் ஆதரவு திரட்டும் முயற்சி
‘உலக மக்களே ஒன்றுகூடுங்கள்!’ - உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அழைப்பு

நேட்டோ அமைப்பில் சேர விரும்பிய உக்ரைனால், தங்கள் நாட்டுக்கு ஆபத்து எனக் கூறி அந்நாட்டின் மீது பிப்ரவரி 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்திவருகிறது ரஷ்யா. தாக்குதல் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் ஆகும் நிலையில், தங்கள் நாட்டுக்கு ஆதரவாக உலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி.

இந்தப் போரை ரஷ்யா தொடர்ந்து நடத்தினாலும், உக்ரைன் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொல்ல முடிந்ததே தவிர வேறு எந்தப் பலனையும் அடைய முடியவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. தவிர, இந்தப் போரில் இதுவரை 7,000 முதல் 15,000 வரையிலான எண்ணிக்கையில் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நேட்டோ தெரிவித்திருக்கிறது.

மறுபுறம், இந்தப் போரில், நேற்று வரை 977 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. எனினும், இதைவிட அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்ந்திருக்கும் என்றே பரவலாகக் கருதப்படுகிறது. 36 லட்சம் பேர் அகதிகளாக போலந்து, ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். போலந்தில் மட்டும் 21 லட்சத்துக்கும் அதிகமானோர் தஞ்சமடைந்திருக்கிறார்கள். 65 லட்சம் பேர் வீடிழந்து உள்நாட்டிலேயே அகதிகளாகியிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், அங்கு மருத்துவக் கல்வி பயின்ற இந்திய மாணவர்கள் வரை ஏராளமானோர் இந்தப் போரினால் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி இன்று ஆங்கில மொழியில் பேசி வெளியிட்டிருக்கும் காணொலிப் பதிவில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உலகில் உள்ள ஒவ்வொருவரின் இதயத்தையும் நொறுக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். உக்ரைனுக்கு ஆதரவாக உலக மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“உங்கள் நாட்டின் சதுக்கங்கள், தெருக்களில் ஒன்றுகூடுங்கள். மக்களின் உயிர் முக்கியம்; சுதந்திரம் முக்கியம்; அமைதி முக்கியம்; உக்ரைன் முக்கியம் என முழக்கமிடுங்கள்” என்று அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

கூடவே, ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள ஆயுதங்களை அளிப்பது உள்ளிட்ட பயனுள்ள மற்றும் கட்டுப்பாடற்ற உதவிகளை உக்ரைனுக்கு வழங்குமாறும் நேட்டோ அமைப்புக்கு ஸெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in