மூழ்கிப்போன மோஸ்க்வா: பழிவாங்கத் தயாராகும் ரஷ்யா!

ரஷ்யப் போர்க் கப்பல் ‘மோஸ்க்வா’
ரஷ்யப் போர்க் கப்பல் ‘மோஸ்க்வா’

உக்ரைன் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த ‘மோஸ்க்வா’ எனும் ரஷ்யப் போர்க் கப்பல் கருங்கடலில் மூழ்கிவிட்ட நிலையில் அதற்குப் பழிவாங்கும் வகையில் ரஷ்யா நடத்தப்போகும் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகிறது உக்ரைன்.

க்ரைமியாவில் உள்ள செவஸ்டோபோல் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்தக் கப்பல் மீது உக்ரைன் ராணுவம் ‘நெப்டியூன்’ ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்தக் கப்பலில், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த தளத்தின் மீது உக்ரைனின் இரண்டு ஏவுகணைகள் மோதி வெடிக்கச் செய்தன. இந்தத் தாக்குதலில் அந்தக் கப்பல் கடுமையாகச் சேதமடைந்தது. பின்னர் துறைமுகத்தை நோக்கி அந்தக் கப்பலைக் கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும், அதில் இருந்த 500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுவிட்டதாகவும் கூறிய ரஷ்யப் பாதுகாப்புத் துறை, கடும் கடல் கொந்தளிப்பு காரணமாக அந்தக் கப்பல் மூழ்கிவிட்டதாக அறிவித்தது.

எனினும், “அந்தக் கப்பல் எரிந்துகொண்டிருக்கிறது. கூடவே கடலில் கடும் காற்று வீசிவருகிறது. இதனால் அவர்களுக்கு (ரஷ்ய வீரர்கள்) உதவி கிடைக்குமா எனத் தெரியவில்லை” என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் அலெக்ஸீய் ஆரெஸ்டோவிச் கூறியிருந்தார்.

அந்தக் கப்பலிலிருந்து உதவிகோரி வந்த அழைப்புகளை ஏற்று லித்துவேனியா, துருக்கி, ருமேனியா போன்ற நாடுகளின் கடற்படைகள் மீட்புப் பணியில் இறங்கின. இதில் 54 பேர் துருக்கி கப்பலால் மீட்கப்பட்டனர் என்று தெரிகிறது. அதேசமயம், இந்தக் கப்பலில் இருந்தவர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து எந்தத் தகவலையும் ரஷ்யா வெளியிடவில்லை.

மோஸ்க்வா கப்பலின் கேப்டன் ஆன்டன் குப்ரின்
மோஸ்க்வா கப்பலின் கேப்டன் ஆன்டன் குப்ரின்

மோஸ்க்வா கப்பலின் கேப்டன் ஆன்டன் குப்ரின் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக உக்ரைன் உள் துறை அமைச்சர் ஆன்டன் கெராஷென்கோ தெரிவித்திருக்கிறார். பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்து சில மணி நேரங்களில் உக்ரைனின் பாம்புத் தீவின் மீது தாக்குதல் நடந்தச் சென்றது இதே கப்பல்தான். கேப்டன் ஆன்டன் குப்ரிதான் தாக்குதலுக்கான உத்தரவைப் பிறப்பித்தவர்.

பிப்ரவரி 24-ல் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய பின்னர் இதுவரை 20,000 ரஷ்ய வீரர்களும் ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது. 8 ரஷ்யப் போர்க் கப்பல்களையும், படகுகளையும் மூழ்கடித்திருப்பதாக உக்ரைன் கூறியிருக்கிறது.

உக்ரைனைப் பொறுத்தவரை இந்தக் கப்பலை மூழ்கடித்ததன் மூலம், ரஷ்யாவை வீழ்த்திவிட்டதாகக் கருதவில்லை என்றாலும், இது ஒரு முக்கியமான தருணம் என்றே கருதுகிறது. சோவியத் ஒன்றிய யுகத்தில், உக்ரைனின் மிகோலிவ் நகரில் உருவாக்கப்பட்ட கப்பல் இது. 1980-கள் முதல் இக்கப்பல் ரஷ்யக் கடற்படையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

ரஷ்யக் கப்பற்படைப் பிரிவுகளின் தலைமைக் கப்பல்களில் (‘ஃபிளாக்ஸ்ஷிப்’) ஒன்றான மோஸ்க்வா உக்ரைனால் மூழ்கடிக்கப்பட்டது இந்தப் போரின் முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. 1904-ல் ஜப்பானுடனான போரில் ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோஸ்க் எனும் ஃபிளாக்ஸ்ஷிப்’ போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் இப்படியான ஓர் இழப்பை ரஷ்யா எதிர்கொள்கிறது. இந்த இழப்பை ரஷ்யா எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

எனவே, நிச்சயம் ரஷ்யா பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும் என்பதை உத்தேசித்திருக்கும் உக்ரைன் அதற்கான முன்தயாரிப்புகளில் இறங்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in