உருக்குலையும் உக்ரைன்... ஒன்றும் செய்யாத உலகம்!

உருக்குலையும் உக்ரைன்... ஒன்றும் செய்யாத உலகம்!

“இரண்டாம் உலகப் போர் நினைவுக்கு வருகிறது” - உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சொல்வது இதுதான். தார் பூசப்பட்டதுபோன்ற கருமை நிறத்தில் கட்டிடங்கள் சிதைவுற்றுக் கிடக்கின்றன. வாகனங்கள் உருத் தெரியாமல் உருக்குலைந்து கிடக்கின்றன. கீவ், கார்கிவ், மரியுபோல் நகரங்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கின்றன. ஒட்டுமொத்த உக்ரைனையும் ஒரு குப்பைமேடாக்க வேண்டும் எனும் வெறியுடன் தாக்குதல் நடத்துகிறது ரஷ்யா.

18 முதல் 60 வயது வரையிலான ஆண்கள் உக்ரைனைவிட்டு வெளியேறக் கூடாது; கட்டாய ராணுவப் பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதால், ரயில் நிலையங்களில் கண்ணீருடன் பிரியும் குடும்பங்கள் காண்போரைக் கலங்கடிக்கின்றன. ஆம், இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், 1939-ல் போலந்தை ஹிட்லரின் படைகள் ஊடுருவியபோது அரங்கேறிய காட்சிகள் இப்போது உக்ரைனில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

ஆரம்ப சுணக்கமும் அதிகரிக்கும் அழிவும்

நாஜிகளின் பிடியிலிருந்து உக்ரைன் மக்களை விடுவிப்பதாக அறைகூவல் விடுத்து இந்தப் போரை ரஷ்யா தொடங்கியது. ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் உக்ரைனியர்கள், ரஷ்யப் படைகளை வரவேற்று வாழ்த்துவார்கள் என புதின் தப்புக் கணக்கு போட்டார். அதனால்தான், ஆரம்பத் தாக்குதல்களை வைத்து சற்றே சுணக்க நிலைக்குச் சென்றார். அது ரஷ்யப் படைகளில் உயிரிழப்பு ஏற்படவும் வழிவகுத்தது. அதேவேளையில், ரஷ்யப் படைகளைத் தீரத்துடன் எதிர்த்து நிற்கும் உக்ரைனிய வீரர்களையும் பொதுமக்களையும், டீசல் தீர்ந்துபோனதால் நடுவழியில் நிற்கும் ரஷ்ய பீரங்கிகளையும், தங்கள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதை புதின் அரசு ஒப்புக்கொண்டதையும் வைத்து, ரஷ்யத் தாக்குதல் வலுவற்றது என்று கருதிவிட முடியாது.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்

ஒருகட்டத்தில் புதின் சுதாரித்துக்கொண்டார். உக்ரைன் குடிமக்களைக் கொன்றழிக்கும் நோக்குடன் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டன ரஷ்யப் படைகள். ரஷ்யாவில் போருக்கு எதிராக எழும் குரல்களை அடக்க கடும் நடவடிக்கைகள், அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்துவது என பல முனைகளில் தனது போர் வியூகத்தை அவர் விரித்திருக்கிறார்.

ரஷ்யாவுக்கு என்ன பாதிப்பு?

2014-ல் க்ரைமியாவை ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டதைத் தொடர்ந்து ரஷ்யா மீது சுமத்தப்பட்ட பொருளாதாரத் தடைகள் அத்தனை வலுவற்றவை என்றே கருதப்படுகிறது. ஆனால், இந்த முறை அமெரிக்கா, ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் ரஷ்யக் கரன்ஸியான ரூபிளின் மதிப்பைக் கணிசமாகச் சரியச் செய்திருக்கின்றன. இன்றைய தேதிக்கு ஒரு டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு 122.482. நம்மூர் மதிப்பில் ஒரு ரூபிள் 0.80 ரூபாய்!

ரஷ்யாவின் ஸ்பெர்பேங்க் வங்கி ஐரோப்பாவில் இனி இயங்க முடியாத அளவு முடங்கிக்கிடக்கிறது. போர் தொடங்கியதும் நியூயார்க் பங்குச்சந்தை, நாஸ்டாக் பங்குச் சந்தை ஆகியவற்றில் சில ரஷ்ய நிறுவனங்களின் வர்த்தகம் முடங்கியது. அரசுக்குச் சொந்தமான முதலீட்டு நிதியான ‘இறையாண்மை செல்வ நிதி’யாக ரஷ்ய நிதியமைச்சகத்தின் வசம் இருக்கும் 10 பில்லியன் டாலரைக் கொண்டு, இழப்பை எதிர்கொண்டிருக்கும் ரஷ்ய நிறுவனங்களை மீட்டெடுக்க புதின் அரசு முயற்சிக்கிறது. அதேவேளையில் என்ன நடந்தாலும் பின்வாங்கப்போவதில்லை என உறுதியாக இருக்கிறார் புதின்.

தடுக்க முடியாமல் தடுமாறும் உலகம்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்தாலும், ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. எனினும், அதை வைத்து ரஷ்யாவுக்கு என்ன அழுத்தம் கொடுக்க முடியும் எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

இத்தனை வருடங்களில் நடந்த அனைத்துப் போர்களையும் படையெடுப்புகளையும் ஐநா முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திவிடவில்லைதான். அதேவேளையில் ஐநாவால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. வளைகுடாப் போர் உள்ளிட்ட பல போர்கள் ஐநா முன்னெடுத்த நடவடிக்கைகளால்தான் முடிவுக்கு வந்தது.

ஆனால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா, பகிரங்கமாகவே அணு ஆயுத மிரட்டல்களை விடுக்கிறது. உக்ரைனில் உள்ள அணு உலைகளைக் கைப்பற்றுவது, குண்டுவீசித் தாக்குதல் நடத்துவது என அச்சுறுத்துகிறது. குறுக்கே எந்த நாடு வந்தாலும் விளைவு இதுவரை பார்த்திராத அளவுக்கு மோசமாக இருக்கும் என ஆரம்பத்திலேயே அச்சுறுத்திவிட்டார் புதின். எனவே, ரஷ்யாவை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பதில் யாரிடமும் தெளிவான திட்டம் இல்லை.

வெளியுறவுக் கொள்கைகளும் ஆதிக்கமும்

பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் தத்தமது பிரத்யேக பாணியிலான வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. அமெரிக்காவின் ஐந்தாவது அதிபரான ஜேம்ஸ் மன்ரோ உருவாக்கிய மன்ரோ கொள்கையைக் கொண்டுதான் அமெரிக்கா கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக உலகில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அந்தக் கொள்கையின்படி, மேற்கத்திய அரைக்கோளத்துக்குள் (Western Hemisphere) அடங்கும் நாடுகளின் விவகாரங்களில் ஐரோப்பிய நாடுகள் தலையிடக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டது.

ரஷ்யாவுடனான பனிப்போர் உச்சத்தில் இருந்த காலம் வரை அந்தக் கொள்கையை அமெரிக்கா பின்பற்றியது. அதன் பின்னர், வோல்ஃபோவிட்ஸ் கொள்கையைப் பின்பற்றுகிறது. அதன்படி, ஒரு நாடு தனக்குப் போட்டியாக உருவெடுக்கக்கூடும் என அமெரிக்காவுக்குத் தோன்றினால் அதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் முழுவீச்சில் இறங்கும். இந்தப் போர் ரஷ்யாவுடனான ஐரோப்பிய நாடுகளின் உறவைத் துண்டிக்க ஒரு நல்வாய்ப்பு. எனவே, கவனமாகக் காய்நகர்த்திவருகிறது பைடன் அரசு.

1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பின்னர், ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரேய் கோஸிரெவ், ‘அருகில் உள்ள அயல் தேசங்கள்’ எனும் பதத்தை உருவாக்கினார். அதன் தாக்கம் புதினிடம் நிறையவே உண்டு. ரஷ்யாவுக்கு அருகில் இருக்கும் உக்ரைன், மால்டோவா போன்ற நாடுகளில் வசிக்கும் ரஷ்ய வம்சாவளி மக்களைப் பாதுகாப்பது ரஷ்யாவின் கடமை எனும் அடிப்படையில், ‘ரஷ்ய உலகம்’ எனும் பதமும் உருவாக்கப்பட்டது. உக்ரைனில் ஒருபகுதியாக இருந்த க்ரைமியாவை இணைத்துக்கொண்டது, உக்ரைன் மீதான போருக்கு முன்னதாக, டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளைச் சுதந்திர நாடுகளாக அறிவித்தது, உக்ரைன் ஒரு நாடே அல்ல என வாதிடுவது என்று புதின் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தக் கொள்கையின் விளைவுகள்தான்!

உக்ரைனுக்கு நீதி கிடைக்குமா?

தாக்குதல் அதிகரித்திருக்கும் நிலையில், ரஷ்ய விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பறக்காத வகையில் ‘நோ ஃப்ளை ஸோன்’ அமல்படுத்த உத்தரவிடக்கோரி நேட்டோவிடம் உக்ரைன் முன்வைத்த கோரிக்கை மறுதலிக்கப்பட்டுவிட்டது. அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ரஷ்யா ஐரோப்பா முழுவதும் விரிவான அளவில் போரைத் தொடங்கிவிடும் என்று காரணம் சொல்லும் நேட்டோ மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் ஸெலன்ஸ்கி.

உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்திய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) விசாரணை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மீதான விசாரணையைக் கைவிட்டுவிட்ட ஐசிசி, ரஷ்யா விஷயத்தில் என்ன செய்யும் என உறுதியாகத் தெரியவில்லை. போர்க் குற்றம் தொடர்பான சான்றுகளைச் சேகரிப்பதே என்பது மிகவும் சவாலான காரியம்.

சர்வதேச நீதிமன்றத்தின் (ஐசிஜே) உதவியை நாடலாம். ஆனால், அதன் கட்டாய அதிகார வரம்பை ரஷ்யா ஏற்றுக்கொள்ள மறுப்பதால் அதிலும் சில முட்டுக்கட்டைகள் உள்ளன. அதேவேளையில், இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையில் (சிபிபிசிஜி) கையெழுத்திட்ட 152 நாடுகளில், ரஷ்யாவும் உக்ரைனும் அடக்கம். அதை வைத்து உக்ரைன் வாதிடலாம். மறுபுறம், இந்தப் போரைத் தொடங்குவதற்கு வலுவான காரணத்தை முன்வைக்க விரும்பிய ரஷ்யா, டோன்பாஸ் பகுதியில் இனப்படுகொலையில் உக்ரைன் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியது. அதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவை இழுக்கும்பட்சத்தில், அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரஷ்யா வாதிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி என்ன ஆகும்?

ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த உக்ரைன் முன்னாள் அதிபர் யானுகோவிச், 2014-ல் உக்ரைன் மக்கள் போராட்டத்தால் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார். உக்ரைனை வீழ்த்திவிட்டால் தற்போது பெலாரஸில் இருக்கும் அவரைக் கொண்டு பொம்மை அரசை உருவாக்க ரஷ்யா திட்டமிடுகிறது. இதே நிலை நீடித்தால், உக்ரைனைத் தாண்டி ஜார்ஜியா, மால்டோவா, எஸ்தோனியா என்று தனது ஊடுருவலை புதின் விஸ்தரித்துக்கொண்டே செல்வார் என்றும் அஞ்சப்படுகிறது.

உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் வசிக்கும் மக்கள் பத்திரமாக வெளியேறும் வகையில் மனிதாபிமான அடிப்படையில், தற்காலிக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என ரஷ்யா ஒப்புக்கொண்டது. எனினும், மரியுபோலில் ரஷ்யப் படைகள் தாக்குதலை நிறுத்திக்கொள்ளாததால், நகரத்திலிருந்து வெளியேறவிருந்த மக்கள் மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கிக்கொள்ளுமாறும், மறு உத்தரவு வரும் வரை காத்திருக்குமாறும் மரியுபோல் நகர நிர்வாகம் அறிவித்திருக்கிறது. துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்யாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால், கடல்வழியாக உக்ரைனுக்கு வரும் உதவிகளைத் தடுத்துவிடலாம் என ரஷ்யா கருதுகிறது.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

பெலாரஸ் எல்லையில் நடந்துவந்த பேச்சுவார்த்தையில் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. ராணுவ ரீதியிலான உதவிக்கு உலக நாடுகள் எதுவும் முன்வராத நிலையில், ஒரு நாட்டின் தலைவருக்கு உரிய தார்மிகப் பொறுப்புடன் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தன்னந்தனியராக இந்தப் போரை எதிர்கொள்கிறார். தானோ தனது அரசோ உக்ரைனைவிட்டு வெளியேறப்போவதில்லை என அவர் சூளுரைத்துவிட்டார். தொடர்ந்து உலகத் தலைவர்களைத் தொடர்புகொண்டு ரஷ்யா மீது மேலும் மேலும் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவர அழுத்தம் தருகிறார். நேட்டோவிடம் உரிமையுடன் சண்டையிடுகிறார். கிட்டத்தட்ட சாபம் விடுகிறார். அதைத் தாண்டி அவரால் என்ன செய்ய முடியும்? மொத்தத்தில் கையறு நிலையில் இருக்கிறது உக்ரைன் - உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in