ஜார்ஜ் சோரஸ்
ஜார்ஜ் சோரஸ்

‘மூன்றாம் உலகப் போரின் தொடக்கம்... மனித நாகரிகமே முடிவுக்கு வரும்’ - உக்ரைன் போர் குறித்து எச்சரிக்கும் சமூக சேவகர்

ஹங்கேரியைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், சமூக சேவைகளுக்குப் புகழ்பெற்றவர். 91 வயதான அவர் தனது சொத்தில் 64 சதவீதத்தைப் பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடையாக அளித்தவர். மிகவும் தாராள குணம் கொண்டவர் என ஃபோர்ப்ஸ் இதழால் பாராட்டப்பட்டவர். இத்தனைச் சிறப்பு மிக்க ஜார்ஜ் சோரஸ், உக்ரைன் போர் குறித்து கூறியிருக்கும் கருத்து ஆழ்ந்த கவலையளிக்கிறது.

டாவோஸில் நடந்துவரும் உலகப் பொருளாதார மாநாட்டில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “அடக்குமுறை அரசுகள் தற்போது ஏற்றம் காண்கின்றன. ஜனநாயக ரீதியிலான அரசுகள் பின்னடைவைச் சந்திக்கின்றன. இன்றைக்கு சீனாவும் ரஷ்யாவும் ஜனநாயக சமூகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கின்றன” என்று கூறியிருக்கிறார். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் ஜனநாயக சமூகத்துக்கு எதிரான அலை தொடங்கியதாகக் கூறிய அவர், உக்ரைன் போரின் விளைவாக உருவான நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் சரியாகக் கையாண்டன என்றும் பாராட்டினார்.

ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருளைத் தேவைக்கு அதிகமாகவே ஐரோப்பா சாந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், சீனா மற்றும் ரஷ்யாவுடனான ஜெர்மனியின் வர்த்தக உறவு குறித்தும் அதிருப்தி தெரிவித்தார். ஜெர்மனியின் முந்தைய பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் வணிக அடிப்படையிலான கொள்கையின் மூலம் ரஷ்ய எரிவாயு விஷயத்தில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூறிய அவர், ஜெர்மனியின் ஏற்றுமதி சந்தையாக சீனா இருப்பதையும் விமர்சித்தார்.

பிப்ரவரி மாதம் பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதின், அப்போதே உக்ரைன் மீதான ஊடுருவலுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சம்மதத்தையும் பெற்றுவிட்டதாக ஜார்ஜ் சோரஸ் கூறினார். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஜி ஜின்பிங் தவறிவிட்டதாகக் கூறிய அவர், மூன்றாவது முறையும் அதிபர் பதவியில் அவர் தொடர்வதற்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார்.

“உக்ரைன் போர் காரணமாக பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போர் இரண்டாம்பட்சமாகிவிட்டது. நாம் ஏற்கெனவே பின்னடைவைச் சந்தித்திருப்பதாக நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். மீள முடியாத பாதிப்புகளுக்குப் பருவநிலை மாற்றம் வித்திடும். அது நமது நாகரிகத்துக்கு முடிவுகட்டிவிடும். எனவே, போரை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவர நம்மிடம் இருக்கும் அத்தனை வளங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக புதினைத் தோற்கடிப்பதுதான் நமது நாகரிகத்தைக் காப்பாற்றுவதற்கான சிறந்த மற்றும் ஒரே வழி” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in