
உக்ரைன் நாட்டின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள கார்கிவ் என்ற பகுதிக்கு உட்பட்ட குப்யான்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள ஹரோசா என்ற கிராமத்தில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனை உக்ரைன் அரசு உறுதி செய்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் ஹரோசா கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் என்பதால் உலக நாடுகள் ரஷ்யாவின் இந்த பயங்கர தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளன. அமெரிக்கா, மால்டோவா, எஸ்டோனியா போன்ற நாடுகள் இந்த தாக்குதலுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த போரில் உக்ரைன் பக்கம் இருப்பதை இந்நேரத்தில் இந்த நாடுகள் உறுதியும் செய்துள்ளன.
ஹரோசாவின் சூப்பர் மார்க்கெட் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து உக்ரைன் மேற்கொண்ட மீட்பு பணியில் 51 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. “ரஷ்யாவின் இந்த பயங்கர தாக்குதல் உக்ரைன் மக்களை திகிலூட்டுவதாக உள்ளது. இதனால்தான் உக்ரைனுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என வெள்ளை மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.