உக்கிரமாகத் திருப்பி அடிக்கும் உக்ரைன்: கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை மீட்டெடுத்த கதை!

உக்கிரமாகத் திருப்பி அடிக்கும் உக்ரைன்: கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை மீட்டெடுத்த கதை!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி இன்றுடன் 203 நாட்களாகின்றன. முதல் நாளிலிருந்தே தீரத்துடன் எதிர்த்துப் போரிட்டுவந்த உக்ரைன் ராணுவம், கடந்த சில நாட்களாக ரஷ்யப் படைகள் மீது பதிலடித் தாக்குதல் நடத்தி முக்கியமான நகரங்களை மீட்டெடுத்துவருகிறது.

செவ்வாய்க்கிழமை கார்கிவ் நகரை ரஷ்யப் படைகளிடமிருந்து கைப்பற்றிய உக்ரைன் வீரர்கள், தேசியக்கொடியை ஏந்தியபடி உற்சாகமாகக் காட்சியளித்தனர். சர்வதேச எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோவ்சான்ஸ்க் நகர் விடுவிக்கப்பட்டிருப்பதாக, உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது. கெர்ஸன் நகரை மீட்டெடுக்க கடும் தாக்குதலில் உக்ரைன் படையினர் ஈடுபட்டிருக்கிறார்கள். உக்ரைனின் தெற்குப் பிராந்தியங்கள் உட்பட 6,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பகுதிகளை உக்ரைன் படைகள் மீட்டெடுத்திருக்கின்றன.

ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் லுஹான்ஸ்க் பகுதியிலும் உக்ரைனின் கை ஓங்கியிருக்கிறது. அந்தப் பிராந்தியத்தின் முக்கிய நகரான க்ரெம்மினாவில் உக்ரைன் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. ஒருவேளை அங்கிருந்து ரஷ்யப் படைகள் மொத்தமாக வெளியேறியிருக்கலாம் அல்லது உக்ரைன் கொடியை அகற்ற துணிச்சல் வராமல் பதுங்கியிருக்கலாம் என லுஹான்ஸ்க் அளுநர் செர்ஹி ஹடாய் கூறியிருக்கிறார்.

இஸியும் நகரம் உக்ரைன் படைகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் நிலையில், அங்கிருந்து வெளியேறிய ரஷ்யப் படைகள் ஓஸ்கில் நதியின் கிழக்குப் பகுதியில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இஸியும் நகரத்தில் ஏறத்தாழ 1,000 பேரை ரஷ்யப் படைகள் கொன்று குவித்தன. இன்று அந்நகரத்தின் பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் சிதிலமடைந்து கிடக்கின்றன.

இதற்கிடையே, உக்ரைனின் இந்த பதிலடி மேற்கத்திய நாடுகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. இது ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், இந்தப் போரில் உக்ரைன் வென்றுவிடும் என இப்போதே கணித்துவிட முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் போரில், உடனுக்குடன் முடிவெடுத்து நடவடிக்கையில் இறங்க உக்ரைன் படைத் தளபதிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சூழலுக்கு ஏற்ப அவர்களே முடிவெடுத்து பதிலடித் தாக்குதல்களை நிகழ்த்தினர். ஆனால், ரஷ்யப் படைகளைப் பொறுத்தவரை எல்லா உத்தரவுகளும் கிரெம்ளின் மாளிகையிலிருந்து வர வேண்டியிருந்ததால், ரஷ்யப் படைத் தளபதிகள் உடனுக்குடன் முடிவெடுக்க இயலவில்லை. இதுதான் உக்ரைன் படைகள் ஈட்டிவரும் வெற்றிகளுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in