உக்கிரமடையும் தாக்குதல்... உதவி கோரும் உக்ரைன்: ஒதுங்கி நிற்கிறதா ஐரோப்பா?

உக்கிரமடையும் தாக்குதல்... உதவி கோரும் உக்ரைன்: ஒதுங்கி நிற்கிறதா ஐரோப்பா?

டோன்பாஸ் பிராந்தியத்தின் மீது பீரங்கித் தாக்குதல்கள், வான் வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியிருப்பதால் உக்ரைன் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் ஆயுத வரத்தை நிறுத்த ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் தேவை எனும் நிலையில் இருக்கும் அந்நாடு இருக்கிறது. இவ்விஷயத்தில் தங்களுக்கு உதவிசெய்யுமாறு மேற்கத்திய நாடுகளிடம் அது கோரியிருக்கிறது.

அமெரிக்கத் தயாரிப்பு ராணுவத் தளவாடங்களில் எம்.எல்.ஆர்.எஸ் (மல்ட்டிபிள் லாஞ்ச் ராக்கெட் சிஸ்டம்ஸ்) வகை ராக்கெட் லாஞ்சர்கள் புகழ்பெற்றவை. லுஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்திருக்கும் நிலையில், அந்தப் பகுதிகளில் ஆயுதங்களைக் குவிக்கும் ரஷ்யாவின் முயற்சியை முறியடிக்க அமெரிக்காவின் எம்.எல்.ஆர்.எஸ் ராக்கெட் லாஞ்சர்கள் போன்ற கனரக தளவாடங்கள் தேவை என உக்ரைன் கருதுகிறது.

எனினும், உக்ரைனுக்கு அவற்றை அனுப்ப அமெரிக்கா தயங்குகிறது. ஒருவேளை அவற்றைப் பயன்படுத்தி ரஷ்யப் பகுதிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால், அது தங்களுக்கும் நேட்டோவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் எனும் எண்ணம்தான் அமெரிக்காவின் தயக்கத்துக்குக் காரணம் என்கிறார்கள் அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர்கள். ஏற்கெனவே, ரஷ்ய நிலப் பகுதிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை மனதில் கொண்டே இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எம்.எல்.ஆர்.எஸ் ராக்கெட் லாஞ்சர்கள் போன்ற கனரகத் தளவாடங்கள் உக்ரைனுக்குக் கிடைத்தால் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை நன்றாக உணர்ந்திருக்கும் ரஷ்யா, ஏற்கெனவே இதுகுறித்து அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்கா அப்படிச் செய்தால், அந்நாடு சிவப்பு எச்சரிக்கைக் கோட்டைத் தாண்டிவிட்டதாக அர்த்தம் என்றும், இதற்கான எதிர்வினை மிகக் கடுமையானதாக இருக்கும் என்றும் ரஷ்ய அரசு செய்தித் தொலைக்காட்சித் தொகுப்பாளரான ஓல்கா ஸ்காபீவா ஒரு நிகழ்ச்சியின்போது குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ராக்கெட் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை உக்ரைனுக்கு அனுப்ப அதிபர் ஜோ பைடன் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், அவற்றில் எம்.எல்.ஆர்.எஸ் ராக்கெட் லாஞ்சர்களும் அடங்குமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ரஷ்யாவின் எச்சரிக்கையையும் மீறி எம்.எல்.ஆர்.எஸ் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட தளவாடங்களை அமெரிக்கா அனுப்பினால், அதைப் பின்பற்றி பிரிட்டனும் அதேபோன்ற ராக்கெட் லாஞ்சர்களை வழங்கும் எனத் தெரிகிறது.

இந்தப் போரில் புதின் தோல்வியடைய வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்த நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸும் அதை வலியுறுத்தியிருக்கிறார். உக்ரைன் எல்லைகள் 2014-ல் இருந்தது போல் மீண்டும் மாற்றப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியிருக்கிறது. அதேசமயம், இவ்விஷயத்தில் பிரிட்டனைப் போல ஐரோப்பிய நாடுகள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் போன்றோர் போரை நிறுத்துமாறு புதினிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். உக்ரைனையும் சமரசமாகப் போகச் சொல்லி இருவரும் வலியுறுத்துவார்கள் எனக் கருதப்படுகிறது. இத்தாலியும் அமைதித் திட்டம் ஒன்றை முன்வைத்தது. அதை ரஷ்யா புறக்கணித்துவிட்டது.

இதற்கிடையே, ரஷ்யா விஷயத்தில் ஐரோப்பாவின் பிரதான நாடுகள் மென்மையான போக்குக்கு மாறியிருப்பதாக உக்ரைனும் அதன் நட்பு நாடான போலந்தும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க ஜெர்மனி முன்வரவில்லை என போலந்து கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in