ரஷ்யாவுக்குள் உக்ரைன் ஊடுருவியதா? - புதின் தேசம் விடும் புதுக்கதை!

ரஷ்யாவுக்குள் உக்ரைன் ஊடுருவியதா? - புதின் தேசம் விடும் புதுக்கதை!
கோப்புப் படம்

உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவிவிடுமோ என உலகமே உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும்போது, தங்கள் எல்லைக்குள் உக்ரைன் நாசக்காரர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறிய தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஆனால், இது பொய்த் தகவல் என உக்ரைன் உடனடியாகத் தெளிவுபடுத்திவிட்டது. இதற்கிடையே, உக்ரைனுக்குள் ஊடுருவ காரணம் தேடும் ரஷ்யா இப்படி கதைகட்டிவிடுவதாக விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

உக்ரைன் நாசக்காரர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், ரஷ்யப் படைகள் அதை முறியடித்திருப்பதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்திருக்கிறது. ரோஸ்தோவ் அருகே ரஷ்ய எல்லைக்குள் நுழைய திசைதிருப்பும் உளவுத் துறைக் கும்பல் ஒன்று முயற்சித்ததாகவும், அவர்களில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. உக்ரைன் படையினர் பயன்படுத்திய ராணுவ வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாக, ரஷ்ய செய்தி நிறுவனமான ‘இன்டர்ஃபேக்ஸ்’ கூறியிருந்தது. இது பொய்த் தகவல் என்றும், ரோஸ்தோவ் பகுதியில் தங்கள் படையினர் யாருமே இல்லை என்றும் உக்ரைன் விளக்கமளித்திருக்கிறது.

1991-ல் சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறுவதற்கு முன்னர் அதன் அங்கமாக இருந்த உக்ரைன், அந்த நிகழ்வுக்குப் பின்னர் தனி தேசமாக இயங்கிவருகிறது. எனினும், உக்ரைனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்பும் ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரக் கூடாது, நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்று தொடர்ந்து ஆதிக்க மனநிலையில் செயல்பட்டுவருகிறது. தற்போது உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்திருக்கும் ரஷ்யா, எந்தத் தாக்குதலையும் நடத்தப்போவதில்லை எனச் சொல்லிவருகிறது. கூடவே, பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைன் தரப்பு வழங்க வேண்டும்; நேட்டோவில் இணையக் கூடாது என்றெல்லாம் நிபந்தனை விதித்திருக்கிறது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முன்னெடுப்பில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்மதித்திருக்கிறார். உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவாதபட்சத்தில் இந்தச் சந்திப்பு பிப்ரவரி 24-ல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ரஷ்யா இப்படி ஒரு தகவலை வெளியிட்டது, உக்ரைன் மீதான ஊடுருவலுக்குக் காரணம் கற்பிக்கும் முயற்சி என்றே ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in