படுகொலை, பாலியல் வன்கொடுமை செய்த ரஷ்ய வீரர்: விசாரணையைத் தொடங்கிய உக்ரைன் நீதிமன்றம்

படுகொலை, பாலியல் வன்கொடுமை செய்த ரஷ்ய வீரர்: விசாரணையைத் தொடங்கிய உக்ரைன் நீதிமன்றம்

உக்ரைன் போரில் ரஷ்யப் படையினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை நடந்துவருகிறது. இதில், பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட ரஷ்ய வீரர் ஒருவர் குறித்த விசாரணையை உக்ரைன் நீதிமன்றம் நேற்று (ஜூன் 23) தொடங்கியது. இந்தப் போரில் நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பான முதல் விசாரணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யப் படையைச் சேர்ந்த மிகையீல் ரமனோவ் (32), உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள புரோவார்ஸ்கி பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கு வசித்த நபரைக் கொன்றதுடன், அவரது மனைவியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்தார். மறுத்தால் அப்பெண்ணின் குழந்தையைக் கொன்றுவிடுவதாகவும் அச்சுறுத்தினார். பிப்ரவரி 24-ல் உக்ரைன் போர் தொடங்கிய நிலையில், மார்ச் மாதம் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்ட மிகையீல் ரமனோவ் வழக்கு விசாரணையில் நேரடியாக ஆஜராகவில்லை. அவர் இல்லாமலேயே விசாரண நடந்துவருவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தலைமை வழக்கறிஞர் இரீனா வெனெடிக்டோவா, “மிகையீல் ரமனோவ் இப்போது எங்கு இருக்கிறார் என எங்களுக்குத் தெரியாது. ஒருவேளை அவர் போரில் தொடர்ந்து பங்கேற்றிருக்கலாம். சுழற்சி முறையில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கலாம். ஒருவேளை இறந்துபோயிருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எனினும், அவர் இல்லாமலேயே விசாரணையை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்” எனக் கூறியிருந்தார்.

மிகையீல் ரமனோவின் புகைப்படத்தை ரஷ்யத் தலைமை வழக்கறிஞரின் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. ரமனோவின் சமூகவலைதளப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் பெரிய கரடி உருவத்தைத் தனது நெஞ்சுப் பகுதியில் பச்சை குத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.

முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் ஒக்ஸானா கலியுஸ், தனது தனியுரிமை காக்கப்பட வேண்டும் என்பதால் மூடிய கதவுகளுக்குள் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கேட்டுக்கொண்டதாகக் கூறினார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட மிகையீல் ரமனோவ் ரஷ்யாவில் எங்கோ தங்கியிருப்பதாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

ஒருவேளை மிகையீல் ரமனோவ் ரஷ்யாவில் இருந்தாலும் அவர் கைதுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை உணர்ந்திருப்பதாகத் தெரிவித்த ஒக்ஸானா கலியுஸ், ஒருவேளை அவர் வேறொரு நாட்டுக்குச் சென்றால் கைதுசெய்யப்பட்டு உக்ரைனுக்கு கொண்டுவரப்படுவார் என்றும் உறுதியளித்தார்.

ரஷ்யப் படையினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பான சான்றுகளை உக்ரைன் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் திரட்டி ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவற்றில் பாலியல் வன்கொடுமை தொடர்பான 50 வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

கடந்த மாதம் கீவ் நகருக்குச் சென்றிருந்த ஐநா அதிகாரியான பிரமிளா பேட்டன், உக்ரைனில் நடந்திருக்கும் பாலியல் குற்றங்களைப் பொறுத்தவரை இந்த விசாரணை ஒரு தொடக்கம்தான் என்றும், பெரிய அளவில் மறைக்கப்பட்ட குற்றங்கள் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, உக்ரைனில் ரஷ்யர்கள் நிகழ்த்திய பாலியல் குற்றங்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in