மவுசை இழக்கும் ட்விட்டர்... ஓராண்டில் குறைந்தது பயன்பாடு!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இன்றுடன் ஓராண்டு முடிந்த நிலையில், அதன் பயன்பாடு, வர்த்தகம், நம்பகத்தன்மை குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4,400 கோடி டாலருக்கு (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டரை வாங்கினார். கடந்த அக். 27-ம் தேதி இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து எலான் மஸ்க் வசம் ட்விட்டர் வந்தது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்தே தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

ட்விட்டருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில் அதற்கு முதலில் சுதந்திரம் அளிக்கவிருப்பதாகக் கூறிய எலான் மஸ்க், ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி உள்பட முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை நீக்கினார். இது அதிரடி மாற்றமாகப் பார்க்கப்பட்டது. தொடர்ந்து, பயன்படுத்தப்படாத ட்விட்டர் கணக்குகளை நீக்கியதுடன், அதுவரை இலவசமாக பயன்படுத்திவந்த ட்விட்டர் கணக்குகளுக்கு கட்டணம் நிர்ணயித்தார்.

ட்விட்டர் / எக்ஸ் தளம்
ட்விட்டர் / எக்ஸ் தளம்

அதிகாரபூா்வ கணக்குக்கான புளூ டிக் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சந்தா அளிக்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவித்தார். ட்விட்டரின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகவும் அதிலிருந்து மீள இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். இறுதியாக ட்விட்டர் என்றாலே 'நீலக்குருவி' என்ற அடையாளத்தையே மாற்றினார் மஸ்க். மேலும் ட்விட்டருக்குப் பதிலாக 'எக்ஸ்' என்றும் பெயரை மாற்றினார். இது ட்விட்டர் பயனாளர்களிடையே பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

இதனிடையே பாதுகாப்பை மீறி 20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் திருடப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு பல மாற்றங்களை எதிர்கொண்ட ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கி இன்றுடன் ஓராண்டு முடிந்துவிட்டது. இந்த ஓராண்டில் ட்விட்டரின் பயன்பாடு, வர்த்தகம் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ட்விட்டரின் தனியுரிமைக் கொள்கைகளான அதன் சரிபார்ப்பு அமைப்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முக்கிய அம்சங்களை எலான் மஸ்க் அகற்றியதும், ட்விட்டரின் முக்கிய விதிகளை உருவாக்கி செயல்படுத்தும் பொறியாளர்கள், மதிப்பீட்டாளர்களை நீக்கியதும் இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. நன்கு பயன்பாட்டில் இருந்த ட்விட்டர் இந்த ஓராண்டில் பல குறைகளுடன் முழுமையற்றதாக இருப்பதாக பயனாளர்கள் கூறுகின்றனர். இந்த ஒரு ஆண்டில் எந்தவொரு முன்னேற்றத்தையும் மஸ்க் ஏற்படுத்தவில்லை என்றும் பயனர்கள், விளம்பரதாரர்களிடம் ட்விட்டர் அதன் மதிப்பை இழந்து வருவதாகவும் இன்சைடர் இன்டலிஜென்ஸ் ஆய்வாளர் ஜாஸ்மின் என்பெர்க் கூறியுள்ளார். உலகளாவிய தளமான ட்விட்டரின் அனைத்து மாற்றங்களிலும் தன்னுடைய சொந்த விருப்பத்திற்கு ஏற்ப எலான் மஸ்க் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் எலான் மஸ்க் கைவசம் வந்த பின்னர் ட்விட்டரில் தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்படுவதாக பல்வேறு தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து, ட்விட்டரின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது அமெரிக்க அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டது போன்ற தகவல்கள் பதிவிடப்பட்டு அதிகம் பேரால் பகிரப்பட்டுள்ளது.

ட்விட்டர்
ட்விட்டர்

அதுபோல, கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் - ஹமாஸ் போரைப் பற்றிய தவறான தகவல்களையும் பிரசாரங்களையும் பரப்பும் 'புளூ டிக்' கணக்குகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து போர் தொடர்பான வெறுப்புப் பிரசாரம், தவறான தகவல், வன்முறை, பயங்கரவாத உள்ளடக்கம் ஆகியவற்றைக் கையாள்வது தொடர்பாக விளக்கம் தருமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஆணையம் கோரியுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் ட்விட்டர் அதன் நம்பகத்தன்மையை இழந்து வருவதாக கூறும் ஆய்வாளர்கள், அதன் பயன்பாடு மேலும் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in