‘இவாங்கா இல்லை’: தொடக்கத்திலேயே இடரும் ட்ரம்ப்

தந்தையுடன் இவாங்கா
தந்தையுடன் இவாங்கா

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் முந்தைய அதிபரான ட்ரம்ப். ஆனால் தந்தையின் அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகித்த ட்ரம்ப் வாரிசுகள், இம்முறை விலகியிருப்பது ட்ரம்ப்புக்கு தொடக்க இடறலாக நேர்ந்திருக்கிறது.

அமெரிக்க அதிபருக்கான 2020 தேர்தலில் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார் டொனால்ட் ட்ரம்ப். ஆனாலும் சோர்ந்து போகாதவராக 2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்றார். அவ்வாறே தற்போது உறுதி செய்திருக்கிறார். ’மீண்டும் அமெரிக்காவை ஜொலிக்கச் செய்வேன்’ என்ற உத்திரவாதத்துடன் மீள்பிரவேசத்தை அறிவித்திருக்கிறார்.

தனது ஆட்சிக் காலத்தில் சர்ச்சைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பேர்போன ட்ரம்ப், அந்த அதிருப்தி காரணமாக அடுத்த தேர்தலில் தோல்வியுற்றார். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒருவர் 2 முறை நாட்டின் அதிபராக வாய்ப்புண்டு. அந்த வகையில் தனது அடுத்த இன்னிங்ஸை தெம்போடு அறிவித்திருக்கிறார் ட்ரம்ப்.

இவாங்கா ட்ரம்ப்
இவாங்கா ட்ரம்ப்

அடுத்த அதிபர் தேர்தலுக்கு அமெரிக்கா ஆயத்தமாகாத சூழலில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு விசித்திரமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின் வேட்பாளராவதற்கு முதலில் அவர் சார்ந்த குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக வேண்டும். அதற்கான ஆதரவுகளை திரட்டும் வகையிலும் பணிகளை தொடங்கியிருக்கிறார் ட்ரம்ப்.

கட்சி நிலவரம் எப்படியோ, ஆனால் தனிப்பட்ட வகையில் ட்ரம்புக்கான ஆதரவுகள் சரிந்திருப்பதாக தெரிகிறது. தந்தையின் அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான ஃபுளோரிடா விழாவில், ட்ரம்பின் வாரிசுகளான இவாங்கா ட்ரம்ப் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் ஆகியோர் ஏனோ பங்கேற்கவில்லை.

இந்த 2 வாரிசுகளும் முந்தைய ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் வெள்ளை மாளிகையின் செல்வாக்கானவர்களாக வலம் வந்தவர்கள். தந்தை ட்ரம்பின் பிரதி நிதியாக இவர்கள் முக்கிய முடிவுகள் எடுத்ததும், கூட்டங்களில் பங்கேற்றதும், தூர தேச பயணங்கள் மேற்கொண்டதும் நடந்தது. இந்த வகையில் இந்தியாவுக்கும் இவாங்கா சுற்றுப்பயணம் வந்திருந்தார். ஆனால் இம்முறை வாரிசுகளின் ஆதரவின்றி ட்ரம்ப் தனது அரசியல் முடிவை அறிவித்திருக்கிறார்.

இந்தியாவில் இவாங்கா
இந்தியாவில் இவாங்கா

இந்த இரு வாரிசுகளில் இவாங்கா, ட்ரம்பின் முதல் மனைவி இவானாவின் மகளாவார். இவாங்கா மட்டுமன்றி அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும் ட்ரம்ப் ஆலோசகர்களில் முக்கிய இடம் வகித்தவர். மத்திய கிழக்கு நாடுகளில் ட்ரம்பின் கரத்தை வலுப்படுத்தியதில் குஷ்னரின் பங்கு அதிகம். பத்திரிக்கையாளர்களிடம் சிக்கிய இவாங்கா ’தான் அரசியலில் இருந்து விலகியிருப்பதாகவும், குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்போவதாகவும்’ தெரிவித்திருக்கிறார். மகள் இவாங்காவின் இந்த முடிவு, தந்தை ட்ரம்புக்கு அரசியல் எதிர்காலம் நொடித்திருப்பதையே உணர்த்துவதாக பைடனின் ஜனநாயக கட்சியினர் பகடி செய்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in