மாபெரும் வேலைநிறுத்தத்தில் குதித்த லாரி ஓட்டுநர்கள்: திணறும் தென் கொரியா!

மாபெரும் வேலைநிறுத்தத்தில் குதித்த லாரி ஓட்டுநர்கள்: திணறும் தென் கொரியா!
கோப்புப் படம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் கொரியா முழுவதும் லாரி ஓட்டுநர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தொழில் நிறுவனங்கள் கடும் முடக்கத்தை எதிர்கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என விமர்சித்திருக்கும் அதிபர் யூன் சுக் இயோல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்திருக்கிறது.

உலகின் 10-வது பெரிய பொருளாதார நாடான தென் கொரியாவில், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், சிமென்ட் உற்பத்தி ஆலைகள், உருக்கு ஆலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு லாரி ஓட்டும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், வருமானத்தை உயர்த்த வேண்டும்; பணிச்சூழல் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு மாதங்களில் அவர்கள் நடத்தும் இரண்டாவது போராட்டம் இது. இந்த முறை அதிக அளவில் ஓட்டுநர்கள் பங்கேற்றிருப்பதால், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

தென் கொரியாவில் லாரி ஓட்டும் பணியில் மொத்தம் 4.2 லட்சம் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் 25,000 பேர் இந்தப் போராட்டத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். இன்று அந்நாட்டின் 164 பகுதிகளில் 7,000-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தவிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டத்துக்கு அதிபர் யூன் சுக் இயோல் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பொருளாதார நெருக்கடிக்கு இடையே விநியோகச் சங்கிலியைப் பணயமாக வைக்கும் இந்தச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘பொறுப்பற்ற இந்தப் போராட்டம் தொடர்ந்தால், பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று அவர் எச்சரித்திருக்கிறார்.

தென் கொரிய சட்டப்படி, போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பணிக்குத் திரும்பவைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உத்தரவை மீறினால், மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை அல்லது 30 மில்லியன் வான் (தென் கொரிய கரன்ஸி) அபராதமாக விதிக்கப்படும். இதன் இந்திய மதிப்பு 18 லட்சம் ரூபாய்.

இதுதொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் லாரி ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் யாரும் அதற்கு முன்வரவில்லை எனப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in