‘சென்னை வந்த பிறகுதான் எனக்கெல்லாம் உயிரே வந்துச்சு!’

உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாணவி தகவல்
காவ்யா
காவ்யா

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கிடையே நடைபெறும் போர் உக்கிரமடைந்துள்ளது. இப்போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் குமார் கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த சந்தன் ஜிண்டால் எனும் மாணவரும் உடல்நலக் குறைவால் காலமானார்.

இதனால் உக்ரைனில் எந்த நேரத்தில், என்ன நடக்குமோ என்ற அச்சம், அந்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டம், கூட்டமாக உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தனிவிமானம் மூலம் டெல்லிக்கு இந்திய மாணவர்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் நேற்று சென்னை வந்தனர். உக்ரைன் போர்ச்சூழலில் இருந்து தப்பி வந்த அவர்களிடம் பேசினோம்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கோபாலின் மகள் காவ்யா, உக்ரைனில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய காவ்யா, “எங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து ஹங்கேரி வழியாக புடாபெஸ்ட் விமான நிலையம் வந்தோம். உக்ரைனில் இருந்து தப்பி தங்கள் நாடுகளுக்குச் செல்ல வந்த வெளிநாட்டு மாணவர்கள் ஏராளமானோர் புடாபெஸ்டில் பல நாட்களாக காத்திருக்கிறாங்க. விமானங்களை இயக்குவதில் உள்ள கட்டுப்பாடு காரணமாக, அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதில் சிக்கல் இருக்குனு சொல்றாங்க. ஆனால், என்னோட படிச்ச 240 இந்தியர்களும் நல்லபடியாக அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பிட்டோம்.

ஆனால், போர் நடக்கக்கூடிய கீவ், போல்டாவா, சுமி நகரங்களில் நிறைய இந்திய மாணவர்கள் சிக்கியிருக்காங்க. அவங்களை எப்படியாவது இந்திய அரசு காப்பாத்தணும். உக்ரைனில் இருந்த வரைக்கும் இந்தியா திரும்புவோமா என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருந்துச்சு. சென்னை வந்த பிறகுதான் எனக்கெல்லாம் உயிரே வந்துச்சு” என்றார்.

செளமிதா
செளமிதா

சென்னை வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செளமிதா கூறுகையில், “என்னோட அப்பா கருணாமூர்த்தி கஸ்டம்ஸ்ல வேலை பார்க்கிறார். என்னோட கனவு, லட்சியமெல்லாமே டாக்டர் ஆவது தான். அதுக்குத்தான் வெளிநாடு சென்று படி என அப்பா அனுப்பி வைச்சார். உக்ரைனில் நடக்கும் போரைப் பார்த்தால், அந்த கனவு என்ன ஆகும் என்று கவலையாக இருக்கு. ஏற்கெனவே நான்கு வருடம் அங்கு படிச்சிட்டேன். அடுத்து என்ன செய்றதுன்னு தெரியலை” என்று கூறினார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுலநந்தினி கூறுகையில், “உக்ரைனில் இருந்து ஹங்கேரிக்கு பஸ்ல இரவு 10 மணிக்கு கிளம்புனோம். எல்லா இடங்களிலும் கடுமையான சோதனை. அடுத்த நாள் மாலை 4 மணிக்குத் தான் ஹங்கேரி போய்ச் சேர்ந்தோம். ஆனால், உக்ரைனில் இருந்து கிளம்பிய எங்களுக்கு உணவு, குடிநீர் எதுவுமே கிடைக்கலை. ஒரு நாள் முழுவதும் பட்டினி கிடந்து தான் ஹங்கேரிக்கு பஸ்ல தப்பிச்சு வந்தோம். எங்கேயும் பஸ்சை நிறுத்த முடியலை. ஹங்கேரி வந்த பிறகு தான் அங்கிருந்த என்ஜிஓ மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் எங்களுக்கு குடிநீர், சாப்பாடு கொடுத்தாங்க. உக்ரைனில் இருந்து பெரும்பாலும் பெண் மாணவிகளைத் தான், பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறாங்க. ஆனால், மாணவர்கள் பலர் இன்னமும் உக்ரைனில் தான் இருக்காங்க. அவர்களையும் இந்திய அரசு பத்திரமாக மீட்கணும். எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா அங்கு தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி பெரும்பாலான மாணவர்கள் மத்தியிலே இருக்கு” என்றார்.

ஏஞ்சல் விக்டர்
ஏஞ்சல் விக்டர்

கேரளாவைச் சேர்ந்த ஏஞ்சல் விக்டர் நம்மிடம் பேசுகையில், “என்னோட நண்பர்கள் நிறைய பேர், கார்கிவ் பகுதியில் சிக்கியிருக்காங்க. அவங்களையும் பத்திரமாக இந்திய அரசு மீட்க வேண்டும். உக்ரைனில் இருந்து ஹங்கேரி எல்லை வழியாகத்தான் இந்தியாவிற்கு பெரும்பாலான இந்திய மாணவர்கள் தாயகம் திரும்புகிறாங்க. ஆனால், ஹங்கேரியில் கிட்டத்தட்ட 13 மணி நேரம் பாஸ்போர்ட் செக்கப்பிற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்திய தூதரகம் மாணவர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in