முகம் தெரியாத பெண்ணுக்கு சீக்ரெட் மெசேஜ்… 21 பேரை சுட்டுக் கொன்ற வாலிபர்: அமெரிக்காவில் நடந்த துயரம்!

முகம் தெரியாத பெண்ணுக்கு சீக்ரெட் மெசேஜ்… 21 பேரை சுட்டுக் கொன்ற வாலிபர்:  அமெரிக்காவில் நடந்த துயரம்!

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 21 பேரைக் கொலை செய்த வாலிபர், சம்பவம் நடப்பதற்கு முன்பு முகம் தெரியாத பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் தகவல் அனுப்பியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ராப் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் நேற்று உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை சால்வேடார் ராமோஸ் என்ற வாலிபர் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் ராமோஸ் கொல்லப்பட்டார்.

இந்த கொலை நிகழ்வை நடத்துவதற்கு முன்பு ராமோஸ் தனது பாட்டியையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து ராமோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்கூட்டியே தகவல் பகிர்ந்தது தற்போது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டாவில் முன்கூட்டியே தகவல்

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “ராமோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கிகளுடன் செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதையடுத்து முன்பின் தெரியாத ஒரு பெண்ணை டேக் செய்த ராமோஸ், ஒரு ரகசியம் இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், மே 24-ம் தேதி காலை 5.43 மணிக்கு, தான் ஒரு செயலைச் செய்யப்போவதாக மீண்டும் அப்பெண்ணிற்கு தகவல் அனுப்பியுள்ளார். அது என்ன செயல் என்று அப்பெண் எழுப்பிய கேள்விக்கு, அதனை தான் காலை 11 மணிக்கு முன்பாக சொல்வதாக ராமோஸ் கூறியுள்ளார். மேலும் ஒரு ரகசியம் இருப்பதாக பலமுறை குறுஞ்செய்தி அனுப்பிய ராமோஸ், கடைசி வரை அது என்ன என்று தன்னிடம் தெரிவிக்கவில்லை என அந்த பெண் தெரிவித்தார்” என்று போலீஸார் கூறினர்.

நண்பர்கள் கூறுவது என்ன?

ராமோஸ் குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், “குழந்தைப் பருவத்தில் அவர் பேச்சுக்குறைபாடு உடையவராக இருந்தார். போக போக அவர் போதை மருந்து பயன்படுத்த ஆரம்பித்தார். இதனால் அவரது தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இதன் காரணமாக அதிகமாக தனிமையில் தான் இருப்பார். அவருக்குள் ஏற்பட்ட மாற்றம் நண்பர்களுடனே பல முறை முரண்பட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பே தனக்கு விருப்பமானது என தானியங்கி துப்பாக்கி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். நான்கு நாட்களுக்கு முன்பும் அவர் இரண்டு துப்பாக்கிகளின் படங்களை வெளியிட்டார். அதில், என் துப்பாக்கியின் படங்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்” என்று கூறினர்.

துப்பாக்கி கலாச்சாரம்
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மே மாதத்தில் மட்டும் 4 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. டெக்ஸாஸ் நகரின் சூப்பர் மார்க்கெட்டிலும், நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டிலும், லிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள தேவாலயத்திலும், தற்போது பள்ளியிலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஜோ பைடன் கண்டனம்

பள்ளிக்குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,, "எப்போது தான் நாம் அனைவருமே துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்கப்போகிறோம்? இன்னும் சிலர் 'துப்பாக்கி சுதந்திரத்தை' ஆதரிக்கின்றனரே! துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு குடிமகனும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை இழப்பது பெற்றோருக்கு நீங்கா சோகம். நான் 1972-ம் ஆண்டுஒரு விபத்தில் என் மனைவியையும், மகளையும் இழந்தேன். 2015-ம் ஆண்டு என் மகன் புற்றுநோயால் இறந்தார். ஒரு குழந்தையை இழப்பது ஆன்மாவின் ஒரு துண்டை பிய்த்து எடுப்பதுபோன்று வலி தரும். நெஞ்சில் ஒரு வெறுமை ஏற்படும். ஏதோ ஒன்று உங்களை முழுவதுமாக உறிஞ்சிக் கொள்வதுபோல் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறுகையில், "நடந்தது எல்லாம் போதும். இதயம் நொறுங்கிவிட்டது. துணிந்து நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in