இந்தியாவில் தேர்தல் நடத்துவது குறித்து ஐ.நா கவலைப்படத் தேவையில்லை... டென்ஷனான அமைச்சர் ஜெய்சங்கர்!

இந்தியாவில் தேர்தல் நடத்துவது குறித்து ஐ.நா கவலைப்படத் தேவையில்லை... டென்ஷனான அமைச்சர் ஜெய்சங்கர்!

தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள், அதைப்பற்றி ஐ.நா கவலைப்பட தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஐ.நா.சபை
ஐ.நா.சபை

இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4- ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து  சமீபத்தில் ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியாவில் நிலவி வரும் ஒட்டுமொத்த அரசியல் சூழல் தொடர்பாக  கவலை தெரிவித்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

"தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே, இந்தியாவிலும் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 'தேர்தலை நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை' என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவது குறித்து ஐ.நா. எங்களுக்கு சொல்ல தேவையில்லை. தேர்தல்  சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை இந்தியாவின் மக்கள் உறுதி செய்வார்கள். எனவே, அது குறித்து கவலை கொள்ள வேண்டாம்" என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே இந்தியாவில் மனித உரிமைகள் குறித்து ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்திருந்தன. அதற்கு இந்தியா தரப்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு தூதர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இதே பிரச்சினையை எழுப்பியிருந்த ஐ.நா சபைக்கும் இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in