அகதியாய் துரத்தியடிக்கும் பொருளாதார நெருக்கடி!

அகதியாய் துரத்தியடிக்கும் பொருளாதார நெருக்கடி!

ஒரு காலத்தில் குண்டு விழுந்து செத்துப்போவோமோ என அஞ்சி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள், தற்போது பட்டினியால் செத்துப்போவோமோ என அஞ்சி தமிழகத்திற்கு இடம் பெயரும் அவலம் தொடங்கியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு நாளும் புதிய, புதிய துன்பங்களை அந்நாட்டு மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற போராட்டமும் வெடித்துள்ளது. இந்த அளவிற்கு இலங்கையின் நெருக்கடிக்குக் காரணம் என்ன? இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் மையச்சக்கரம் தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலா ஆகியவை தான்.

கடந்த 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சர்வதேச விமானச்சேவைகள் நிறுத்தப்பட்டன. இப்படித்தான் இலங்கையுடனான அந்நிய நாட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இதன் காரணமாக இலங்கை பொருளாதாரத்தின் ஜீவநாடியாக விளங்கிய தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலாத்துறை தொழில்கள் அடியோடு முடங்கின. இதனால் நிரந்தர வருமானத்தை இலங்கை இழந்தது. இதனால் கடும் பொருளாதார பின்னடவை இலங்கை சந்திக்கத் துவங்கியது. இதன் தொடர் விளைவைத்தான் தற்போது இலங்கை சந்தித்து வருகிறது. ஒரு கிலோ அரிசி 290 ரூபாய் என ஏறியுள்ள விலையால் அதை வாங்க முடியாத எளிய மக்களின் பொருளாதார நிலை, அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது அன்றாடக்கூலி தொழிலாளர்கள் தான். அத்துடன் அன்றாடம் 7 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சிறுதொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால் வேலையிழந்த தொழிலாளர்கள் பட்டினிப் பட்டாளமாக மாறியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. இந்நிலையில்தான் இலங்கைக்கு இந்திய அரசு 7,500 கோடி ரூபாய் கடனுதவி செய்துள்ளது. மேலும் பல நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. ஆனாலும், இலங்கையில் நிலைமை சீரடையவில்லை. இந்த நிலையில், இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரன், மேரிகிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட 6 பேர் நான்கு மாத கைக்குழந்தையுடன் பைபர் படகில் தமிழகத்தில் உள்ள தனுஷ்கோடி வந்துள்ளனர். உணவு, குடிநீரின்றி சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக தவித்த அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் காப்பாற்றி, மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்துள்ளனர். இப்படி ஒரே நாளில் இலங்கையைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

கடந்த 1980-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக புலம் பெயர்ந்தனர். அவர்களை அன்றைய மத்திய, மாநில அரசுகள் அனுதாபத்துடன் ஏற்றுக் கொண்டன. இலங்கையில் போர் முடிவடைந்த பின் இந்தியாவில் இருந்து பலர் மீண்டும் தாயகம் திரும்பினர். ஆனாலும், இந்தியாவில் பலர் அகதிகளாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் இந்தியாவில் இலங்கை அகதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 18,937 குடும்பங்களைச் சேர்ந்த 58,668 இலங்கை அகதிகள் அரசு ஏற்படுத்திக் கொடுத்த முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிய வந்தது. இதில் எத்தனை பேர் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றனர் என்பது குறித்த ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 'அகதிகள் முகாம்' என்ற பெயரை, 'இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்' என்று முதல்வர் ஸ்டாலின் மாற்றியதுடன், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களின் மேம்பாட்டுக்காக ரூ.317 கோடியில் பத்து புதிய நலத்திட்டங்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தாா். மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக 2021-22-ம் நிதியாண்டில் ரூ.80 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் ரூ.78 கோடி ஏற்கனவே தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பி தமிழர்கள் இன்னும் ஏராளமானோர் தமிழகத்திற்கு அகதிகளாக செல்வார்கள் என்று இலங்கை பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இலங்கையில் இருந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்கு வரக்கூடிய தமிழர்களை மனிதாபிமான முறையில் மத்திய, மாநில அரசுகள் அணுக வேண்டும். அவர்கள் பிழைத்துக் கிடப்பதற்கான வழிவகை செய்ய வேண்டும்” என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in