
காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இன்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுகுறித்த தகவலை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 13 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில், காபூல் விமான நிலையத்தின் வெளியே உள்ள நுழைவாயில்களில் அச்சுறுத்தல் இருப்பதால், அமெரிக்கர்கள் விமான நிலையத்திற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அமெரிக்க அரசின் உத்தரவு வரும் வரை யாரும் விமான நிலையம் வர வேண்டாம் என்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
காபூலில் பலத்த பாதுகாப்பு மிக்க ராணுவ வீரர்கள் நிறைந்துள்ள பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதியின் அனைத்து சாலைகளும் பாதுகாப்பு படையினரால் சீல் வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் நஃபி தாகூர் கூறுகையில், "இன்று காலை காபூல் ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது, இதன் காரணமாக எங்கள் குடிமக்கள் பலர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏராளமான குண்டு வெடிப்புகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்வதாக குற்றச்சாட்டு உள்ளது. கடந்த மாதம் காபூலில் சீனர்களால் நடத்தப்படும் ஓடடல் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 சீனர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.