‘சொல்லிவையுங்கள் ஸெலன்ஸ்கியிடம்... உக்ரைனியர்களைச் சிதைத்துவிடுவேன்!’

விளாசித்தள்ளிய விளாதிமிர் புதின்

‘சொல்லிவையுங்கள் ஸெலன்ஸ்கியிடம்... உக்ரைனியர்களைச் சிதைத்துவிடுவேன்!’

ரஷ்யாவின் பெருந்தொழிலதிபர்களில் ஒருவரும், புகழ்பெற்ற செல்ஸீ கால்பந்தாட்ட அணியின் உரிமையாளருமான ரோமன் ஆப்ரமோவிச், உக்ரைன் போரில் தன்னாலான அமைதி முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். இதற்காக மாஸ்கோ, இஸ்தான்புல், கீவ் நகரங்களுக்கு விமானத்தில் தொடர் பயணம் மேற்கொண்டுவருகிறார்.

இந்தப் போர் காரணமாக, மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளுக்குள்ளாகியிருக்கும் ரஷ்யத் தொழிலதிபர்களில் ரோமன் ஆப்ரமோவிச்சும் ஒருவர்.

சமீபத்தில், அவர் மூலம் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அனுப்பிய கடிதம், ரஷ்ய அதிபர் புதினுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஸெலன்ஸ்கி தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன் முன்வைக்கும் நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அதைப் படித்துப்பார்த்த புதின், “ஸெலன்ஸ்கியிடம் சொல்லிவையுங்கள். நான் அவர்களைச் சிதைத்துவிடுவேன்” என்று கூறினாராம்.

இதற்கிடையே, அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் ரோமன் ஆப்ரமோவிச் உள்ளிட்ட சிலர், உக்ரைன் தலைநகர் கீவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களது உடலில் விஷம் கலந்திருந்தது கண்டறியப்பட்டதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. கண் சிவத்தல், முகத்திலும் கைகளிலும் தோல் உறிவது போன்ற பாதிப்புகள் அவர்களிடம் தென்படுவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இன்று (மார்ச் 29) ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை, துருக்கியில் நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை மூலம் எப்படியேனும் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைன் விரும்புகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in