ஐபிஎல் கிரிக்கெட் ஒளிபரப்புக்குத்
தாலிபான் அரசு தடை!

ஐபிஎல் கிரிக்கெட் ஒளிபரப்புக்குத் தாலிபான் அரசு தடை!

துபாயில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வானொலியில் ஒலிபரப்பவோ, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவோ கூடாது என்று ஆப்கானிஸ்தான் நாட்டு ஊடகங்களுக்குப் புதிய ஆட்சியாளர்களான தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க ஏராளமான ரசிகைகளும் வருகிறார்கள். அவர்களிலும் சிலர் நவீன ஆடைகளை அணிந்து வருகிறார்கள். போட்டிகளின்போது ‘சியர் கேர்ள்ஸ்’ நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றனர். தாலிபான்களின் இஸ்லாமிய அரசு இவற்றையெல்லாம் தடை செய்திருக்கிறது. பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கக் கூடாது என்பது மட்டுமல்ல, விளையாட்டு மைதானங்களுக்கே போய் ரசிக்கக் கூடாது என்றும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகத்தான், ஐபிஎல் ஒலி-ஒளிபரப்புகளையும் அவர்கள் தடுத்துள்ளனர்.

பெண்களுக்குக் கட்டுப்பாடு

தாலிபான்கள் ஆட்சியில் விளையாட்டுத் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் பஷீர் அகமது ருஸ்தம்சாய், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆப்கானிஸ்தானில் 400 விளையாட்டுகளுக்கு அனுமதி உண்டு என்றார். அதில் ஒன்றைக்கூட பெண்கள் விளையாடக் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளதே என்று நிருபர்கள் கேட்டபோது, “பெண்களைப் பற்றியே கேள்வி கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்” என்று சீறி விழுந்தார்.

பெண்கள் அமைச்சர்களாக முடியாது என்று தாலிபான்கள் சார்பில் நிருபர்களைச் சந்தித்த இன்னொரு நிர்வாகி திட்டவட்டமாகத் தெரிவித்தார். “பெண்கள் மகப்பேறுக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள், அதில் சந்தேகம் வேண்டாம். பெண்களால் சுமக்க முடியாத பாரத்தை ஏன் அவர்களுடைய தோள்களில் ஏற்ற வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியது சர்ச்சைகளைக் கிளப்பியது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.