போலியோ சொட்டு மருந்து புகட்டும் பாதிக்கப்பட்ட தன்னார்வலர்
போலியோ சொட்டு மருந்து புகட்டும் பாதிக்கப்பட்ட தன்னார்வலர்

போலியோ தடுப்புக்கு மீண்டும் சம்மதிக்கும் ஆப்கன்

உளவு அச்சத்தால் தாலிபான்கள் தடை விதித்திருந்தது அம்பலம்.

3 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை வழங்க தாலிபான்கள் சம்மதித்துள்ளனர். சொட்டு மருந்து மீதான ஐயங்களாலும், உளவாளிகள் ஊடுருவும் கவலையாலும் முக்கால் கோடிக்கும் மேலான ஆப்கன் குழந்தைகளின் உடல்நலனில் தாலிபான்கள் அசிரத்தையாக இருந்த விவகாரம் தற்போது அம்பலமாகி உள்ளது.

தாலிபான் மேற்பார்வையில் போலியோ சொட்டு மருந்து இயக்கம்
தாலிபான் மேற்பார்வையில் போலியோ சொட்டு மருந்து இயக்கம்MehrNews.com

தடை விதித்த தாலிபான்கள்

உலகில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் போலியோ நோயின் பரவல் அதிகமிருக்கும் நாடுகளில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் முதன்மை வகிக்கின்றன. ஐ.நா அமைப்பும் பல்வேறு மருத்துவ சேவை நிறுவனங்களும் போலியோ சொட்டு மருந்தை வழங்க தயாராக இருந்தபோதும், இந்த 2 நாடுகளும் தங்கள் தனிப்பட்ட காரணங்களினால் அவற்றைத் தவிர்த்து வந்தன. இரு நாடுகளிலும் போலியோ பரவல் அதிகமாக இருக்கும் தேசம் ஆப்கானிஸ்தான்! முந்தைய ஆண்டுகளில், அமெரிக்காவின் அரவணைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அங்கே நடைபெற்ற போதும், தாலிபான்களின் தலையீடு காரணமாக போலியோ இயக்கம் முடங்கிக் கிடந்தது.

உளவாளிகள் ஊடுருவல் அச்சம்

போலியோ சொட்டு மருந்து இயக்கத்தின் பணியாளர்கள் பெயரில், மேற்குலக மற்றும் ஆப்கன் அரசின் உளவாளிகள் ஊடுருவுவார்கள் என்ற அச்சம் தாலிபான்களுக்கு அதிகம் இருந்தது. அடுத்தபடியாக சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாத சூழலும் அங்கே நிலவி வந்தது. வீடுதோறும் தாய்மார்களை சந்திக்க வேண்டியிருப்பதால், போலியோ தடுப்பு இயக்கத்தில் முழுக்கவும் பெண்களே பணியில் அமர்த்தப்பட்டார்கள். அங்கே நித்தம் நடக்கும் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டைகளுக்கு அஞ்சி இந்தப் பெண்கள் வெளியில் நடமாட மறுத்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில், உளவாளிகள் என்ற சந்தேகத்தில் போலியோ பெண் சேவையாளர்கள் பலரும் தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐயம் உபயம்- ஒசாமா

ஒசாமா பின் லாடன் பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்ததை, போலியோ பிரச்சார முகாமின் பெயரிலான அமெரிக்க ஆதரவு உளவாளிகள் களமாடிக் கண்டுபிடித்த சம்பவம் தாலிபான்களின் ஐயத்தை மேலும் அதிகரித்தது. ஆப்கன் போலவே, பாகிஸ்தானிலும் அடிப்படைவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு சுகாதாரப் பணியாளர்கள் அடிக்கடி பலியாவதுண்டு. மேலும் மதத்தின் பெயராலும் இந்த இரு நாடுகளும் போலியோ தடுப்புக்கு இன்னும் இணங்காதிருக்கின்றன. போலியோ தடுப்பு மருந்துகள் இஸ்லாத்துக்கு எதிரானது என மதகுருமார்கள் சிலர் எச்சரிக்கை விடுத்ததாலும் பொதுமக்கள் போலியோ இயக்கத்தை புறக்கணித்தனர். மேலும் மேற்குலக சதியில், போலியோ சொட்டு மருந்து போர்வையில் ஆண்மை இழப்புக்கான மருந்துகளை குழந்தைகளுக்கு புகட்டுகிறார்கள் என்ற வதந்தியை இங்கே நம்புவோர் அதிகம்.

அதிகரிக்கும் பாதிப்பு

இந்த காரணங்களால் பொதுவாகவே போலியோ விழிப்புணர்வு இரு நாடுகளிலும் அருகியிருப்பதுடன், ஆப்கான் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3 வருடங்களாக போலியோ இயக்கத்துக்கு முற்றிலுமாக தடை நிலவியது. இதனால் அப்பகுதியின் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 30 லட்சம் குழந்தைகள் போலியோ அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். அதன் சாட்சியாய், போலியோ பாதித்தோரின் எண்ணிக்கையும் அங்கே கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போதைய ஆட்சி மற்றும் அதிகார மாற்றங்களுக்குப் பின்னர், ஐ.நா சார்பிலான முன்னெடுப்புகளுக்கு ஆச்சரியமாய் தாலிபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். தாலிபான்கள் மனமாற்றத்தின் பின்னணியிலும் சில பிரத்யேக காரணங்கள் உண்டு.

போலியோ பாதிப்புக்கு ஆளான ஆப்கன் இளைஞர்
போலியோ பாதிப்புக்கு ஆளான ஆப்கன் இளைஞர்

மனமாற்றத்தின் காரணங்கள்

அந்தக் காரணங்களில் முதலாவது சர்வதேச அங்கீகாரம். உலகின் பல நாடுகள் தாலிபான்களின் ஆப்கன் ஆட்சியை அங்கீகரிக்காத சூழலில், வலிய ஐ.நா உதவ வருவதை தாலிபான்கள் தவிர்க்க விரும்பவில்லை. 2-வது முழு ஆப்கனும் இப்போது தாலிபான்கள் கையில். நாட்டு மக்களின் அபிமானத்தைப் பெற அவர்களும் சிலவற்றை செய்ய வேண்டியிருக்கிறது. அல்லது அவ்வாறு காட்டிக்கொள்ளும் அவசியம் நேர்ந்திருக்கிறது. 3-வதாக அமெரிக்கப் படைகள் அகன்று விட்டதில், உளவாளிகள் எவரும் உள்நாட்டில் வாலாட்ட மாட்டார்கள் என தாலிபான்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள்.

போலியோ இல்லாத உலகம் மலரட்டும்

எனவே, ஒரு மனதாக ஐ.நாவின் போலியோ இயக்க மருத்துவக் குழுவை வரவேற்க, தாலிபான் பிரதிநிதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்களது போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தந்துள்ளனர். தாலிபான்களின் தலைமை இதை அதிகாரபூர்வமாக அறிவித்ததும், ஆப்கனில் முழுவீச்சில் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகள் வழங்கப்பட இருக்கின்றன.

போலியோ அல்லாத சுபிட்ச தேசங்களில் ஒன்றாக ஆப்கனும் விரைவில் மலர இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in